காவிரி நீர் பங்கீட்டில் பிரச்னை இருக்காது : குமாரசாமி

துரை

ர்நாடக மாநிலத்தில் கடும் மழை பெய்வதால் காவிரி நீர் பங்கீட்டில்  இந்த வருடம் பிரச்னை ஏதும் இருக்காது என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.

தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது.   அதை ஒட்டி கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட இன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி வந்துள்ளார்.    அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது குமாரசாமி, “கர்நாடகாவில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறாது.   எனவே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தற்போது எந்த பிரச்னையும் இருக்காது.   நேற்று நான் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.  மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து 3 அல்லது 4 நாட்கள் இருக்கும்.

அதனால் கர்நாடகா இன்னும் தண்ணீர் திறந்து விட உள்ளது.  இம்முறை இரு மாநில விவசாயிகளுமே மகிழ்சி அடைவார்கள்.   இந்த வருடம் கடவுள் அருளால் நல்ல மழை பெய்து வருகிறது.  அதனால் இரு மாநிலங்களும் நீரை பங்கிட்டுக் கொள்வதில் எந்த ஒரு  பிரச்னையும் கிடையாது.” என கூறி உள்ளார்.