மும்பை: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செய்யப்பட்டுவரும் விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்று சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளதாக இந்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமையை பெட்ரோலிய அமைச்சகம் கவனமாக கண்காணித்து வருவதாகவும், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் சவூதி அராம்கோவுடன் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக் நாட்டிற்கு அடுத்தபடியாக, சவூதி அரேபியாதான் இந்தியாவுக்கான பெரிய எண்ணைய் வழங்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி – ஜுலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 7,88,200 பேரல் என்ற அளவில் எண்ணெய் சப்ளை செய்துள்ளது அந்நாடு.