சாவர்க்கர் பற்றிய ராகுல் பேச்சினால் எவ்வித பிளவும் உண்டாகாது : உத்தவ் தாக்கரே

மும்பை

காராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்தியின் சாவர்க்கர் குறித்த பேச்சால் கூட்டணியில் பிளவு உண்டாகாது எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேப் இன் இந்தியா எனத் தெரிவித்ததற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என  பாஜக வலியுறுத்தி வருகிறது.   அதற்கு அவர் தமது பெயர் ராகுல் காந்தி எனவும் ராகுல் சாவர்க்கார் இல்லை எனவும் அதனால் தாம் உண்மையைச் சொன்னதற்கு மன்னிப்பு கோர மாட்டேன் எனவும் தெரிவித்தார்.  இது மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ், “சாவர்க்கரைப் பற்றி தவறாகப்  பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும்.   சரித்திரம் குறித்து தெரியாத  பலர் சுதந்திரப் போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கை மறைத்துள்ளனர்.   ஆனால் அவரை சிவசேனா கட்சி கண்டிக்கவில்லை.  அது தனது முதுகெலும்பை இழந்து காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இது குறித்து,”நாங்கள் வெவ்வேறு கொள்கைகள் கொண்ட கட்சிகள்.  ஒவ்வொரு கட்சிக்கும் முன்பும் சரி இப்போதும் சரி தனித்தனி கருத்துக்கள் உள்ளன.   ஆனால் இந்த கூட்டணி அரசு குறைந்த பட்ச பொதுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.   அதன் கீழ் வரும் அம்சங்கள் குறித்து வேறு வித கருத்துக்கள் இருக்கக் கூடாது.

ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்த அவருடைய கருத்துக்களைச் சொல்லி உள்ளார்.  அதற்காக நாங்கள் எங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவது இல்லை.  அவருடைய கருத்தினால் கூட்டணியில் எவ்வித பிளவும் ஏற்படாது.   நாங்கள் என்றும் சாவர்க்கரை மதிக்கிறோம்.  அதில் இருந்து மாற மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.