சென்னை:

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, முக்கிய சாலைகளில் தெர்மல் கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதில் உள்ள  ஜிபிஎஸ் கருவி மூலம், சாலையில் செல்பவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு, கொரோனாவை தடுக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தெர்மல் காமிரா திட்டம் முதல்கட்டமாக சென்னை கோவையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக சில பிரத்யேக தெர்மல் காமிராக்கள் முக்கிய சாலைகளில் பொருத்தப்பட்டு, அதை, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சாலையில் நடந்து செல்பவர்களின் உடல்நிலை தெர்மல் காமிரா மூலம் ஸ்கிரினிங் செய்யப்பட்டு, அவர்களின் உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டு, அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பது குறித்து கண்டுபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று, டெல்லி இமாம் தப்லிஜி ஜமாத்தில் கலந்துகொண்டவர்களால் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் பலர் தலைமறைவாக இருந்து வருவதால், அவர்களை தேடும் பணியில்,  இந்தியா முழுக்க காண்டாக்ட் டிரேஸ் முறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் களமிறக்கப்பட்டு உள்ளனர்.  தமிழகம் முழுக்க உளவுத்துறை அதிகாரிகள் இதற்காக தீவிரமான பணிகளை செய்து வருகிறார்கள்.  இதுவரை  இதுவரை ஒரு லட்சம் பேர் வரை இப்படி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா உள்ள நபர் ஒரு ஏடிஎம் செல்கிறார். அங்கு பணம் எடுக்கிறார் என்றால் அது வங்கி பரிவர்த்தனையில் பதிவாகும். இதன் மூலம் அவர் எந்த ஏடிஎம் சென்றார், அங்கே எத்தனை பேர் வந்தனர் என்று கண்டுபிடிக்கிறார்கள். அதேபோல் அவர் எங்கெல்லாம் கிரெடிட் கார்ட், டெபிட் கார்டை பயன்படுத்துகிறாரோ அதை எல்லாம் வைத்து அவர் சென்ற இடங்களை டிரேஸ் செய்கிறார்கள். கொரோனா நோயாளிகள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த தகவல் எல்லாம் ஜிபிஎஸ் ஹிஸ்டரியில் பதிவாகி வருகிறது.  கொரோனா பாதித்தவருடன் யாரெல்லாம் நெருக்கமாக இருந்தார்கள் என்பது குறித்தும் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், சிசிடிவி காட்சிகளை போலவே, தெர்மல் கேமரா மூலம் கொரோனா தொற்று நோயாளிகள் கண்டுபிடிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும்  வீடியோ கவனிக்கப்பட்டு வருவதாகவும், சாலையில் செல்லும் ஒவ்வொரு நபரின் உடல்நிலையும், இந்த தெர்மல் கேமரா மூலம்  கண்டறியப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.