தேர்தல் தமிழ்: மாண்புமிகு

என். சொக்கன்
chokan
அமைச்சர், முதல்வர், பிரதமர், நீதிபதி போன்ற முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களைக் குறிப்பிடும்போது, ‘மாண்புமிகு’ என்ற ஒட்டு சேர்க்கப்படும்.
உதாரணமாக, ‘மாண்புமிகு முதலமைச்சர் இப்போது உரையாற்றுவார்’ என்பார்கள்.
இதையே ‘மாண்பமை’ என்றும் பயன்படுத்துவதுண்டு. அதாவது, மாண்புஅமை.
அதென்ன மாண்பு?
மாட்சிமை/மாண்பு என்ற சொற்களுக்குப் பெருமை, அழகு, நன்மை என்ற பொருள்கள் உண்டு. உதாரணமாக, இந்தத் திருக்குறள்:
‘மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்.’
மலரிலே வீற்றிருக்கும் இறைவனின் பெருமைமிகுந்த திருவடிகளைச் சேர்ந்தவர்கள், நிலத்தில் அதிகநாள் வாழ்வார்கள், அவர்களுடைய வாழ்க்கை பெருமையடையும்.
இறைவனைக் குறிக்கப் பயன்படுத்திய ‘மாண்பு’ என்கிற சொல்லை, மனிதர்களில் இருக்கிற பெருமைக்குரிய விஷயங்களைக் குறிக்கவும் பயன்படுத்தலாம். மாண்புமிகு என்றால், மாண்புமிகுந்த, மாண்பமை என்றால், மாண்புஅமைந்த.
அதை மாண்புமிகுந்த, மாண்புஅமைந்த என்றே எழுதிவிட்டுப்போகலாமே, ஏன் சுருக்கவேண்டும்?
மாண்புமிகு, மாண்புஅமை என்பவை வெறும் சுருக்கங்கள் அல்ல. அவை முக்காலத்தையும் குறிக்கின்றன.
அதாவது, சிறப்புநிறைந்த என்று சொன்னால், முன்பு சிறப்போடு இருந்தார், இப்போது சிறப்பாக இல்லை, இனி சிறப்பாக இருக்கமாட்டார் என்பதுபோல் ஒரு பொருள் வருகிறதல்லவா? அதைச் ‘சிறப்புநிறை’ என்று எழுதினால், எப்போதும் சிறப்பாக இருக்கிறவர் என்று பொருள்.
திருமண அழைப்பிதழில் ‘திருவளர்செல்வன்’ என்று எழுதுவார்கள். இதன் பொருள், செல்வம் எப்போதும் வளர்ந்துகொண்டேயிருக்கிறவன்.
அதுபோல, மாண்புமிகு என்றால், அவரிடம் பெருமை எப்போதும் இருக்கும் என்று பொருள், முதல்வர், பிரதமர், நீதிபதிபோன்றோரிடம் நாம் எதிர்பார்ப்பது அதைதானே!
(தொடரும்)