முரசொலி விழாவில் வைகோ பேச மறந்த விசயங்கள்!

டந்த செப்டம்பர் 5ம் தேதி சென்னை கொட்டிவாக்கத்தில் நடைபெற்ற முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு (11 ஆண்டுகள்) தி.மு.க. மேடையில் வைகோ பேசிய நிகழ்ச்சி அது.

ஆகவே, தி.மு.க. – ம.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் அனைவருமே வைகோவின் அன்றைய பேச்சைக் கேட்க மிக ஆவலாக இருந்தார்கள்.

அன்று அனைத்து தலைவர்களும் மேடைக்கு வந்த பிறகு, வைகோ வந்தார். அப்போது மு.க. ஸ்டாலின் எழுந்து போய் நின்று வைகோவை வரவேற்றார். பேராசிரியர் அன்பழகனுக்கும், ஸ்டாலினுக்கும் பொன்னாடை போர்த்தினார் வைகோ.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் தனக்கும் உள்ள நெருக்கம், முரசொலி நாளிதழ் குறித்து, மூத்த தலைவர்களுடனான சம்பவங்கள் என்று வைகோ பேசினார். எல்லோரையும் போல அவருக்கும் 15 நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டன.  அதனால்தானோ என்னவோ, கோவை கூட்டத்தில் முரசொலி மாறனுக்கு கூடுதல் நேரம் அளிக்கப்பட்டதை சுவாரஸ்யமாக வைகோ குறிப்பிட்டார். ஆனாலும் 15 நிமிடங்களுடன் அவர் தனது உரையை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

“இன்னும் கொஞ்சம் நேரம் வைகோவை பேச அனுமதித்திருக்கலாம்” என்று பலரும் நினைத்தது உண்மை.

இதே எண்ணம் வைகோவுக்கும் இருந்திருக்கிறது.  ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசியபோது இதை தெரிவித்திருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில்  கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர், அன்று வைகோ பேசியது குறித்து தெரிவித்தார்.

“வரும் 15ம் தேதி தஞ்சையில் நடக்க இருக்கும் மாநாட்டைப் பற்றி பேசினார் வைகோ. பிறகு, முரசொலி பவள விழா நிகழ்ச்சி குறித்து பேசினார். “அந்த நிகழ்ச்சிக்கு ஏனோ, நமது துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா வரவில்லை. என் பேச்சை அங்கே நேரடியாக அவர்  பார்த்திருந்தால் சரியாக ரசித்து விமர்சித்திருக்க முடியும். டி.வியில் அப்படி ரசித்துப் பார்க்க முடியாது.

ஆனால் நான் பேசியபோது, அங்கே மேடையில் மேடையில் யார் யார் முகம் எப்படி இருந்தது என்பதை டி.வியில் பார்க்க முடியும். பார்க்க வேண்டும்” என்று நகைச்சுவையாகச் சொல்லி சிரித்தார் வைகோ.

பிறகு பேராசிரியர் குறித்து நெகிழ்ந்து பேசினார். “முதலில் நடந்த முரசொலி பவள விழாவுக்கு  உடல் நிலை காரணமாக பேராசிரியர் வரவில்லை. ஆனால் இந்த முறை, “வைகோ வர்றார்யா.. நான் கண்டிப்பா போகணும்” என்று சொல்லி நிகழ்ச்சிக்கு வந்தாராம்.

நான் போய் சிறிது நேரத்தில் வந்தார். நான் எழுந்து குடும்பிட்டேன். முதலில் அவர் கவனிக்கவில்லை.  பிறகு மீண்டும் வணங்கினேன். என்னைக் கண்டவர், கண்களில் நெகிழ்ச்சி.

அவருக்கு நான் பொன்னாடை போர்த்தியபோது, “அவருக்கு போடுங்க.. அவருக்கு போடுங்க” என்று ஸ்டாலினை சுட்டிக்காட்டிச் சொன்னார். நான், “அவருக்கு தனியா பொன்னாடை வைத்திருக்கிறேன். முதலில் நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றேன். பிறகு ஸ்டாலினுக்கும் பொன்னாடை போர்த்தினேன்.

அனைவருக்குமே தலா 15 நிமிடங்கள்தான் பேசுவதற்கு அளித்தார்கள். அதற்குள் முடிந்தவரை பேசினேன்.

முரசொலி, என்னை 29 வருடங்கள் தூக்கிப் பிடித்தது. அந்த இதழுடன்.. கலைஞருடன்..  எனக்கிருந்த பாச பந்தம் குறித்து பேசினேன். மூத்த தலைவர்களுக்கும் எனக்குமான உறவுகள் பற்றியும் சிலவற்றை பேசினேன்.

ஆனால் அந்த மேடையில் பேச வேண்டும் என நினைத்த சில விசயங்களை மறந்துவிட்டேன்.

மிசா காலத்தில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது… 1975ம் வருடம் செப்டம்பர் 15ம் நாள், அண்ணா பிறந்தநாளில் எனது கட்டுரை முரசொலி நாளிதழில் வெளியாக வேண்டும் என விரும்பினேன்.

சிறையில் இருந்தபடியே, “திசை நோக்கி தண்டனிடுகிறேன்.” என்ற கட்டுரையை எழுதி முடித்தேன்.

சிறை நாட்களில் வியாழக்கிழமை தோறும் எனக்கு இன்டர்வியு. அதாவது என் குடும்பத்தினர் வந்து பார்க்கும் நாள். அதன்படி வியாழக்கிழமை… செப்டம்பர் 10ம் தேதி என் குடும்பத்தினர் சிறைக்கு வந்து என்னைப் பார்த்தனர். அவர்களிடம், நான் எழுதிய கட்டுரையைக் கொடுத்து, செப்டம்பர் 15ம் தேதிக்குள் முரசொலி அலுவலகத்தில் இந்தக் கட்டுரையை சேர்த்துவிடுங்கள் என்று கூறி கொடுத்தேன்.

அவர்கள்,  புலவர் அ.ச குருசாமி மற்றும் ஒன்றிய செயலாளர் சுந்தரராஜன்  ஆகியோரிடம் கொடுத்து, முரசொலி அலுவலகத்தில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால்  குறிப்பிட்ட நாளில் அக் கட்டுரையில் முரசொலியில் சேர்க்க முடியவில்லை. ஆகவே செப்டம்பர் 22ம் தேதி அக்கட்டுரை வெளியானது. அப்போது நான், கழியூரான் என்ற புனைப்பெயர் கொண்டிருந்தேன். அந்தப் பெயரில் கட்டுரை வெளியானது.

அதே போல, “எரி நெருப்பும்  ஈசல் கூட்டமும்”, “ஈரானில் புரட்சித் தீ”, “ரத்தம் பொதிந்த 65” போன்ற கட்டுரைகளையும் சிறையில் இருந்து எழுதினேன். இவை எல்லாம் கலைஞருக்கு மிகப்பிடித்த கட்டுரைகள். இந்த கட்டுரைகளுக்காக கலைஞர் என்னை  பாராட்டினார்.

இதை முரசொலி பவள விழா மேடையில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.  மறந்துவிட்டது” என்று கூறி சிரித்தார் வைகோ” என்றார் அந்த பிரமுகர்.

அதனால் என்ன.. வைகோ சொல்ல மறந்த விசயங்களை இப்போ நாம் வெளியிட்டுவிட்டோமே!

Leave a Reply

Your email address will not be published.