அனிதாக்களைத்தாக்கும் நீட் ப்ளூ “வேல்கள்” இவர்கள்தான்!

அனிதா

நீட் குழப்படிகளால் போராடித் தோற்ற மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இது தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. மாநிலமெங்கும் நீட் குழப்படிகளைக் கண்டித்து பரவலாக போராட்டங்கள் நடந்துவருகின்றன.

“நீட் குறித்த தகவல்களை சரியாகச் சொல்லாமல், குழப்பம் செய்ததே மாணவி அனிதாவின் தற்கொலைக்குக் காரணம்” என்ற குரல் பலமாக ஒலிக்கிறது. இதில் அனைவரும் “ப்ளூ வேல்ஸ்” என்று சுட்டிக்காட்டுவது  இவர்களைத்தான்.

ழனிச்சாமி

முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள்:

‘நீட் விலக்குக்குக்கோரி தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எப்படியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுவிடுவோம்” என்று பேசிப்பேசி மாணவரகளுக்கு நம்பிக்கையூட்டி வந்தார்கள், முதல்வர் எடப்பாடியும் அமைச்சர்களும்.

இதற்காகவே  எடப்பாடி பழனிச்சாமி உட்பட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோர் டில்லி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

தம்பிதுரை

தம்பிதுரை: (பாராளுமன்ற துணை சபாநாயகர், அ.தி.மு.க.)

தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஈடாக, “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறவே தமிழக அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.

 

மத்திய அரசிடம் ஓராண்டு விலக்கு கேட்கவில்லை. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கேட்டே பேசி வருகிறோம். ஆலோசித்து வருகிறோம். இதை மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. ஆகவேதான், மருத்துவ மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆரம்பிக்கப்படவில்லை.  கவலைப்படாதீர்கள்.. நல்லதே நடக்கும்” என்று பேசியதோடு, அறிக்கைகளும் விட்டார் தம்பிதுரை.

இது மாணவர்களை மிகவும் நம்பிக்கை கொள்ள வைத்தது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்:

நீட் தேர்வு விலக்கு குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டவர் மத்திய தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும்”என்று அறிக்கை விட்டார்.

இது மாணவர்களுக்கு மிக அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது.

பொன். ராதாகிருஷ்ணன்

பொன். ராதாகிருஷ்ணன்:

தமிழக்ததைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “தமிழக பள்ளிகளில் தகுதியான கல்வி கிடைக்காத  நிலை இருக்கிறது. ஆகவே, நீட் தேர்வுக்கு கால அவகாசம் கேட்கும் தமிழக அரசின் கோரிக்கை கவனத்தில் கொள்ளவேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவப்படிப்பில் வாய்ப்பு தரவேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆகவே  நீட் தேர்வில் ஓராண்டு விலக்கு அளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் நல்ல முடிவு வரும்” என்றெல்லாம் உறுதியாக பேசினார்.

 அட்டர்னி ஜெனரல்:

தமிழகத்துக்கு  ‘நீட்’ லிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் அவசர சட்ட வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. உள்துறை அமைச்சகமும் இதை ஏற்றது. சட்டம், சுகாதாரத்துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளுக்கும் இந்த அவசர சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டது. வரைவு குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தமிழக அரசின் சட்ட வரைவை ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆகவே, “தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் அனுப்பிவிட்டார். எனவே,  விலக்கு கிடைத்துவிடும்” என்ற தகவல் பரவியது.

இதுவும் மாணவர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நடந்தது என்ன?

நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்துவிடும் என்று மாநில முதல்வர் எடப்பாடியும், மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சொல்லி வந்தாலும் அவர்களுக்கே இதில் நம்பிக்கை இல்லை. தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகம்.

பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலும் நீட் தேர்வின் அடிப்படையிலும் இரண்டு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது.

ஆகவேதான், விலக்கு அளிக்கமுடியாது என்று உச்சநீதிமன்றத்தீர்ப்பு வெளியான மறுநாளே நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் பட்டியலை வெளியிட்டது.

ஆக இவர்கள் எந்த அளவுக்கு நீட் விலக்குக்காக போராடினார்கள் என்பது கேள்விக்குறியே.

இன்னொரு புறம், மத்திய அரசு சார்பில், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்ற தோரணையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிவந்தார். மத்திய அமைச்சர் பொன்.ராவும் இதே தோரணையல் பேசினார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் அதே மத்திய அரசு “விலக்கு அளிக்க முடியாது” என்று அபிடவிட் தாக்கல் செய்தது.

ஆக மத்திய அரசும் இரு முகம் காட்டியது.

இப்போது புரிகிறதா அனிதாக்களை தாக்கிய ப்ளூ “வேல்ஸ்” எவை என்று?

– தமிழினி

Leave a Reply

Your email address will not be published.