சொதப்பும் அணிகள் என்பதை மீண்டும் நிரூபித்த இங்கிலாந்து & நியூசிலாந்து..!

பொதுவாக, உலகக்கோப்பை போட்டிகளில் கிரிக்கெட் தாயகமான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மொ‍க்கையாக சொதப்புவதையே வழக்கமாகக் கொண்டவை. ஏனெனில், அவற்றின் கடந்தகால உலகக்கோப்பை வரலாறுகள் இந்தக் கருத்தைப் பறைசாற்றுவதாய் உள்ளன.

உலகக்கோப்பை வரலாற்றில் மொத்தம் 2 முறை அரையிறுதிக்கும், 4 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்ற இங்கிலாந்து அணி, எப்படியோ தட்டுத்தடுமாறி, அதிர்ஷ்டத்தின் மூலமாக இந்தமுறை கோப்பையை வென்றுள்ளது எனலாம்.

நியூசிலாந்தை எடுத்துக்கொண்டால், 6 முறை அரையிறுதிப் போட்டிக்கும், 2 முறை இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றும், ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்தமுறை மிக மிக துரதிருஷ்டவசமான முறையில் கோப்பையை நழுவவிட்டுள்ளது நியூசிலாந்து அணி.
இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி மிகவும் த்ரில்லிங்கான முறையில் இருந்ததென்று நாம் மகிழ்ச்சியடைந்து கொண்டாலும், அந்த 2 அணிகளின் சொதப்பல்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

போட்டியை ஒரு தீர்க்கமான முறையில் முடிக்கும் திறன் 2 அணிகளுக்குமே இல்லாமல் போனது. நியூசிலாந்து நிர்ணயித்த சாதாரண இலக்கான 241 ரன்களை எடுக்க முடியாமல், கடைசிப் பந்தில், கடைசி விக்கெட்டையும் இழந்து போட்டியை சமன் செய்தது இங்கிலாந்து அணி. நியூசிலாந்து அணியாலும் இங்கிலாந்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்து சூப்பர் ஓவரில், இங்கிலாந்து எடுத்த 15 ரன்களை மிஞ்சவும் முடியாமல், குறையவும் முடியாமல் அதுவும் சமன் ஆனது. விளைவு, அதிக பவுண்டரிகள் அடித்த அணி எது? என்ற ஒரு விசித்திரமான விதியின் அடிப்படையில் கோப்பை இங்கிலாந்திற்கு சென்றது.

இரண்டு அணிகளில் எந்த அணிக்குமே ஒரு தீர்க்கமான செயல்பாடோ அல்லது திறனோ இல்லை என்றே கூறலாம். விளையாட்டில் இது எப்போதாவது நிகழக்கூடிய விஷயம்தான் என்று பலர் கருத்துக் கூறலாம். ஆனால், உலகக்கோப்பை போட்டிகளில் சொதப்புவதையே வழக்கமாக கொண்ட இந்த இரு அணிகளும், மீண்டும் தாங்கள் அப்படித்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டன.