தேவர் தங்கக்கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார் துணைமுதல்வர் ஓபிஎஸ்!

மதுரை: சும்பொன் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்  தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து துணைமுதல்வர் ஓபிஎஸ்  கையெழுத்திட்டு பெற்ற நிலையில், தற்போது தேவர் ஜெயந்தி முடிவுற்றதைத் தொடர்ந்து, தேவர் தங்கக்கவசம் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

மறைந்த பசும்பொன் தேவர் திருமகனின் உருவச்சிலைக்கு கடந்த 2014ம் ஆண்டு   மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவால்  13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் செய்து,  அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. இந்த தங்கக்கவசம் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜயந்தி விழாவின்போது அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் இந்த கவசம்  மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதற்கான ஒப்பந்த அடிப்படையிலேயே வங்கியில் இருந்து தங்க கவசத்தை  எடுக்கும் உரிமை,  அதிமுகவின் பொருளாளருக்கும்,  தேவர் நினைவாலயத்தின் நிர்வாகிக்கும்  உண்டு. அதன்படி இருவரும் இணைந்து சென்றுதான்   தங்கக்கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம்.

அதன்படி, தேவர் குருபூஜையையொட்டி, கடந்த வாரம், வங்கியில் இருந்து ஓபிஎஸ் உள்பட நிர்வாகிகளால் பெறப்பட்டு, பசும்பொன் தேவர் ஜெயந்தி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டு விழா நடைபெற்றது.

தற்போது விழா முடிவடைந்து விட்டதால், தேவர் சிலையின் தங்கக்கவசம் மீண்டும், வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.  துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் தங்கக்கவசத்தை பாதுகாப்பாக வங்கியில் ஒப்படைத்தனர்.