“நடிகைகளுக்குன்னா வருவாங்க..!” கமலை மறைமுகமாக தாக்கும்  ஜிவி பிரகாஷ்?

 

நடிகைகளுக்கு ஒரு கஷ்டம் என்றால் வரும் திரைநட்சத்திரங்கள் ஒரு இயக்குநர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், மறைமுகமாக கமல்ஹாசனை கேள்வி கேட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருக்கும் பீட்டா அமைப்பை ஆதரித்து நடிகை த்ரிஷா பேசியதாக, அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். சிலர், “எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு த்ரிஷா மரணமடைந்துவிட்டார்” என சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பினர்.

இதற்கு த்ரிஷா தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்திருந்தார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்து ட்விட்டினார். “ஜல்லிக்கட்டும் வேண்டும். அதே நேரம் பெண்ணின் மனதும் புண்படக்கூடாது” என ட்விட்டியிருந்தார்.

இதற்கிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன், காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் கமல்ஹாசனோ, பிற திரையுலகினரோ இந்த சம்பவத்தைக் கண்டிக்கவில்லை.

இந்த நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், “ நடிகைகளுக்கு ஒண்ணுன்னா வருபவர்கள், இயக்குநர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு ஜல்லிக்கட்டு ஆதரவாளருக்கும் குரல் கொடுப்பேன்” என்று கூறியிருக்கும் ஜி.வி. பிரகராஷ் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று  பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது