கொழும்பு:

லங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும்  இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.

அவர்கள் இந்தியாவில் கேரள மாநிலத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பயிற்சி பெற்ற வர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈஸ்டர் பண்டிகையன்று கொழும்பில் தேவாலயங்கள் உள்பட 8 இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் பல சிறுவர்கள் உள்பட 253 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த கொடூர செயலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்புடன் தொடர்புடைய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை அரசு தடை செய்துள்ளது.

இலங்கை கொண்டுவெடிப்பை தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என செய்திகள் பரவியதை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பான  என்ஐஏ நடத்திய அதிரடி வேட்டையில், பயங்கரவாதிகளின் ஸ்லிப்பர் செல்லாக  செயல்பட்டு  தமிழ்நாட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்வர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற அதிரடி விசரணையை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த இலங்கை லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகே,  (Lieutenant General Mahesh Senanayake) ஈஸ்டர் நாளில் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தவர், அவர்கள்  இந்தியாவுக்குள் நுழைந்திருப்பதாகவும், பெங்களூரு, கேரளா ஜம்மு காஷ்மீர் பகுதியில் தங்கியிருக்க  வாய்ப்பு உள்ளதாக தங்களுக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறினார்.

இலங்கையில் குண்டுவெடிப்பை நடத்திய  பயங்கரவாதிகள் ஏற்கனவே இந்தியாவில் கேரள மாநிலம் மற்றும் காஷ்மீருக்கு சென்றிருந்த தகவலும் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் அங்கு பயிற்சி பெற்றிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.