அரசியல் லாபத்துக்காக பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள்; அரசு அடி பணியாது: கேரள முதல்வர்

டில்லி:

பரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பு  விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள்… அவர்களுக்கு அரசு அடிபணியாது  என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

கடந்த மாதம் 28ந்தேதி அப்போதைய தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு,  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு கேரள மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள இந்து மக்களிடையே கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதேவேளையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை  அமல்படுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அய்யப்பன் கோவில் தந்திரிகள் மற்றும் பந்தள அரச குடும்பத்தினரை பேச்சு வார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வர முடியாது என அறிவித்து விட்டனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கேரளை அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  ஆனால், மேல்முறையீடு செய்ய முடியாது என  கேரள அரசு மறுத்து வருகிறது.

கேரள அரசின் நடவடிக்கைக்கு  பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.  இதனால் கேரள அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பிரனாயி விஜயன்,  சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என்று மீண்டும் கூறினார். .  இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக  சிலர் மற்றும் சில கட்சிகள் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன,. ஆனால் அதற்கெல்லாம், அரசு அடிபணியாது என்றும் தெரிவித்தார்.