இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள்! தந்தை சிலையை ‘திறந்து வைத்த கமல்ஹாசன் காட்டம்

பரமக்குடி:

னது பிறந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சிலையை திறந்து வைத்த கமல்ஹாசன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாகத் தாக்கி பேசினார். இலவசங்களைக் கொடுத்து மக்களைக் கெடுத்துவிட்டார்கள் என்று கடுமையாக சாடினார்.

சிலை திறப்பு விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி  கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். இதற்காக ஏற்கனவே மதுரை வந்திருந்த கமல்ஹாசன் இன்று காலை கார்மூலம் பரமக்குடி சென்றார். அவருக்கு வழிநெடுக அவரது ரசிகர்கள், கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

காலை 10.30 மணிக்கு பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்றனர். பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தந்தை வக்கீல் சீனிவாசனின் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன், அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.

இதையடுத்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். தோடர்ந்து, தெளிச்சாத்தநல்லூரில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மையத்தையும் திறந்து வைத்தார்.

சிலை திறப்பு விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன்

இதற்கிடையில், கமல்ஹாசன் தந்தை சீனிவாசன் பரமக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியதால், நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சலில் வக்கீல்கள் சங்கம் சார்பில் சீனிவாசனின் படம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு சில வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் படம் திறப்பது ரத்து செய்யப்பட்டது.

சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், நான் என்ன படித்துள்ளேன் என்பதைவிட எனது திறனைக் கொண்டு பேசி வருகின்றேன். என் குடும்பத்தில் நான் அரசியலுக்குச் செல்வதை யாரும் விரும்பவில்லை. எனது குடும்பத்தில் ஒரே ஒரு மனிதர் தான் அரசியலுக்கு போக வேண்டும் என நினைத்தார். அவர் நினைத்தது இன்று நடந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது பள்ளி கல்வியை முடித்தவர்கள், உயர்கல்வி தொடர முடியாத நிலை உள்ளது. அதுபோன்ற கமலஹாசன்களுக்காக, திறன் மேம்பாட்டு பயிலகம் இங்கு துவங்கப்படுகிறது. இந்தப் பயிலகம் விரைவில் மற்றப் பகுதிகளிலும் துவங்கப்படும். இது கிராமங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும்.

நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் பணியாற்றியது, வாழ்வில் எனது முன்னேற்றத்திற்குத் தேவையான அனுபவங்களை கொடுத்தது. பெரிய நகரங்களில் முடி திருத்துபவர்களுக்கு ஒரு லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. எந்த தொழிலாக இருந்தாலும் செய்ய வேண்டும். நாட்டில் நன்றாக படித்தவர்கள் துப்புரவு பணியாளருக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.

இங்கு இலவசங்களைக் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். இலவசமாக வழங்கும் கிரைண்டர்களை பழுது பார்க்க, வெளிநாடுகளில் இருந்தா ஆட்கள் வர வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

தந்தை சிலையை திறந்து வைத்த நடிகர் கமல்ஹாசன்

ராணுவத்திற்கு தனது பிள்ளைகளை அனுப்பினால், போரில் இறந்துவிடுவான் என கூறுவார்கள். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் ராணுவத்தில் இறப்பவர்களைவிட அதிகமாக இறந்து வருகின்றனர் என்று கூறிய கமல், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேசும் போது, கமல் நம்மவர் இல்லை, உங்களவர் என கூறினர்.

அதனை நான் சொல்ல வேண்டுமென நினைத்த நிலையில் அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அது உண்மை தான், நான் உங்கள் நான்தான், எனது குடும்ப உறுப்பினர்கள் குறைந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மூலம் அதிகமாகவே கிடைத்துள்ளனர் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  எனக்கு 5 வயது இருந்த போது எனது அண்ணி பரமக்குடியில் எடுத்த பிறந்தநாள் விழா, என் மனதில் என்றும் இருக்கும், எத்தனையோ பிறந்தநாள் விழாக்களை, வெளிநாடுகளில் நான் கொண்டாடி னாலும் மனநிறைவு இருந்ததில்லை, அது இன்று நடைபெற்ற இந்த விழா மூலம் கிடைத்துள்ளது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: free distribution, Kamal, kamal 65th birthday, kamal birthday, kamal father statue, Kamal Haasan, MNM, MNM leader Kamal Haasan, Paramakudi, கமல்ஹாசன், கமல்ஹாசன் பிறந்தநாள்
-=-