டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திருடிய நீரஜ் எனப்படும் நபர், தனது ஆதார் அட்டையை கடையிலேயே தவறி விட்டுச்சென்று விட்டதால், தற்போது காவல்துறையிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது; டெஹ்ராடூன் நகரில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் அனில் சேத்தி. இவர் கடையை ஒருநாள் இரவில் உடைத்து, பொருட்களைத் திருடிக்கொண்டு போய்விட்டார் நீரஜ் எனும் 27 வயது நபர். கடையின் கேமராவில் நீரஜ் உருவம் பதிவாகியிருந்தாலும், அவர் யார் என்பதை காவல்துறையால் அடையாளம் காண முடியவில்லை.

ஆனால், இந்த இடத்தில்தான் நீரஜ் செய்த ஒரு தவறு அவரைக் காட்டிக்கொடுத்தது. கடையிலுள்ள பல பொருட்களை எடுத்துக்கொண்டுபோன நீரஜ், தனது ஆதார் அட்டையை எப்படியோ அங்கேயே தவறவிட்டுவிட்டார். கடையை ஒருநாள் சுத்தம் செய்த அனில் சேத்தி, இந்த ஆதார் அட்டையைக் கண்டுபிடித்தார்.

பின்னர், அதில் குறிப்பிட்டிருந்த முகவரியில் காவல்துறை சென்றுதேட, அங்கே நீரஜ் இல்லை. பின்னர், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னர், வேறொரு குடிசைப் பகுதியில் அவர் பிடிபட்டார்.

விசாரனையில் குற்றத்தை ஒப்புக்கொண்டவர், இதற்கு முன்னதாக, ரூ.65000 மதிப்புள்ள மொபைல் ஃபோன்களை திருடிய குற்றத்திற்காக கடந்த 2012ம் ஆண்டு சிறைக்குச் சென்றதையும் ஒப்புக்கொண்டார்.