திருடிய ‘பைக்’கை  கூரியரில் அனுப்பிய  ”மகா நல்லவன்”

ன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் கோவை மாவட்டம் சூலூரில் ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஊரடங்கால் வேலை இழந்த பிரசாந்த், சொந்த ஊருக்கு செல்ல பல வழிகளில் முயன்றும் , பலன் இல்லை.
அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ’லேத் பட்டறை’ முன்பு, கேட்பாரற்று நின்ற ’’பைக்’,, பிரசாந்துக்கு உதவிக்கரம் நீட்டியது.

அந்த பைக்கை எடுத்துக்கொண்டு மன்னார்குடி பறந்து விட்டார், பிரசாந்த். அந்த பைக்கின் சொந்தக்காரர் சுரேஷ்குமார் போலீசில் இது குறித்து புகார் செய்ததோடு, தானும் தனியாக துப்பறியும் வேலையில் ஈடுபட்டார்.

அருகே உள்ள சி.சி.டி.வி.கேமிராக்களை ஆய்வு செய்தபோது, தனது பைக்கை ஒரு ஆசாமி தள்ளிச்செல்வது தெரியவந்தது.

அந்த காட்சிகளை அக்கம் பக்கத்தில் காட்டி விசாரித்தபோது, திருடனின் ஜாதகமே, சுரேஷ்குமாருக்கு கிடைத்தது.
இந்த விஷயம் மன்னார்குடியில் இருந்த பிரசாந்துக்கும் தெரிந்து விட்டது. தன்னைத்தேடி போலீஸ் வருவது நிச்சயம் என உணர்ந்த பிரசாந்த், திருடிய பைக்கை கூரியர் மூலம் சூலூருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

திருடப்பட்ட பைக்கில் இருந்த ஆவணங்களை பார்த்து, சுரேஷ்குமார் முகவரியை தெரிந்து கொண்டு, அவருக்கே பைக்கை அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், சூலூர் கூரியர் அலுவலகத்தில் இருந்து சுரேஷ்குமாருக்கு,’’ உங்களுக்கு ஒரு பைக் வந்துள்ளது’’ என்று போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓடிப்போய் பார்த்தபோது, அந்த பைக் , திருடப்பட்ட தனது பைக் என்பதும், திருடன் அதனை திருப்பி அனுப்பி வைத்திருப்பதும் தெரியவந்தது.

பைக்கை பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார், போலீசுக்கும் இது பற்றி தகவல் கொடுத்து, தனது புகார் மனு மேல் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்றும் பெருந்தன்மையாக கூறிவிட்டார்.