ராணுவ வீரர் வீட்டில் புகுந்த திருடன்.. திடீரென முளைத்த தேசபக்தி..

’’தியாகிகளுக்கு மட்டும் தான் தேசபக்தி இருக்க வேண்டுமா? திருடனுக்கு இருக்கக்கூடாதா?’’ என்று கேட்கும் வகையிலான ஒரு சம்பவம்.
கேரள மாநிலம் கொச்சி அருகே திருவான்குளம் என்ற ஊர் உள்ளது. அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ கர்னல் குடும்பத்தோடு இரண்டு மாதங்களுக்கு முன் பஹ்ரைன் சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை அந்த வீட்டின் கதவை இரும்பு கம்பியால் உடைத்து திருடன் ஒருவன் புகுந்தான். உள்ளே நுழைந்த பிறகே அந்த வீடு ராணுவ அதிகாரி வீடு என்று அவனுக்கு தெரியவந்துள்ளது. நாட்டை காவல் காத்தவர் வீட்டில் களவாடுவதா? என்று யோசித்தான், மனம் மாறினான். திருடும் முடிவை கை விட்டான்.

Image Courtesy : ManoramaOnline

‘’வீட்டுக்குள் நுழைந்த பிறகு தான் இது ராணுவ அதிகாரி வீடு என்று தெரியும், முன்பே தெரிந்திருந்தால் வீட்டுக்கதவை உடைத்திருக்க மாட்டேன், கர்னல் ..தயவு செய்து என்னை மன்னியுங்கள் ..’’ என்று வீட்டு சுவற்றில் எழுதினான்.

‘’பைபிளின் மூன்றாம் கட்டளையை நான் மீறி விட்டேன்;’ என்றும் எழுதி விட்டு, வீட்டுக்கதவை உடைத்ததற்கு ‘நஷ்ட ஈடாக 1,500 ரூபாயை கர்னல் வீட்டில் வைத்து விட்டு சென்றுள்ளான், தேசபக்தி மிக்க அந்த திருடன்.

அது மட்டுமல்ல. பக்கத்தில் உள்ள டயர் கடையில் திருடிய ஆவணங்களையும் ,கர்னல் வீட்டில் வைத்து விட்டு சென்ற திருடன் ’தயவு செய்து,இந்த ஆவணங்களை டயர் கடைக்காரரிடம் கொடுத்து விடுங்கள்’’ என்று குறிப்பு எழுதி வைத்துள்ளான்.

வீட்டில் வேலை செய்யும் பெண், பொழுது விடிந்து அங்கு வந்தபோது தான் – திருட்டு முயற்சியும், திருடனின் சுவர் ’வாக்குமூலமும்’ போலீசுக்கு தெரிய வந்தது.

– ஏழுமலை வெங்கடேசன்