தஞ்சையில் நீண்ட நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி பைபாஸ் ரவுண்டானா அருகே பல நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தம்பதிகளாக சென்றவர்கள் மற்றும் காதல் ஜோடிகளாக சென்றவர்களே. இந்தக் கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அந்த சாலை வழியே செல்பவர்களை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அவர்களைப் பற்றி எந்த அடையாளமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் நோட்டமிட தொடங்கினர்.

அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்த பொழுது அவர் முன்னுக்கு முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் இந்த நபரை மேலும் விசாரிக்க துவங்கினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளன. அப்போது பேசிய அந்த நபர், “என்னுடைய பெயர் ரமேஷ். என்னுடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து தினமும் இந்தப் பகுதிக்கு இரவு 7 மணிக்கு மேல் வந்துவிடுவோம். புதர்களில் மறைந்துக் கொண்டு தனியாக வரும் தம்பதியினரை வழிமறித்து நகை மற்றும் பணத்தை கொள்ளையத்தோம். மொபைல் போன்களை திருடினால், நாங்கள் சிக்கிக் கொள்வோம் என்பதால் அதை மட்டும் திருடமாட்டோம்.

இந்த பகுதியில் கல்லூரிகள் இருப்பதால் கல்லூரி மாணவர்கள் தங்களது காதலியுடன் அடிக்கடி வருவார்கள். வீட்டிற்கு தெரியாமல் வரும் அவர்களை வழிமறித்து கொள்ளையடித்தால், நிச்சயம் வெளியில் சொல்ல மாட்டார்கள். அதனால் அவர்களிடம் துணிந்து கொள்ளையடிப்போம். சில சமயம் அந்தப் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளோம். பாலியல் பலாத்காரம் செய்யும் சமயங்களில் நாங்கள் போதையில் இருப்பதால் எங்களுக்கு எந்த பயமும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்துவிட்டு, அந்த பணத்தில் சொகுசாக வாழ்ந்து வந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ரமேஷை கைது செய்த காவல்துறையினர், அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.