தில்லானா மோகனாம்பாள்..: பொன்விழா ஆண்டு

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்..

1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். இன்று பொன்விழா காணும் தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள்.

இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள். இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரமாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.

கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ரங்கசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா.

சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார். வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும்

தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம். சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.

தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரையும், நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள்.

எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல் அமையவில்லை.

தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார். ஜெமினி வாசனிடம் பல தடவை, கதையை தரச்சொல்லி கேட்டு நடையாய் நடந்தார்

வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மை விட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.

உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.

ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை  வியக்கவைத்த தருணம் அது..

கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார். அதனால் கதாநாயகன் நடிகர் திலகம் சிவாஜியேதான்.

அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.

வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் லேடி சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.

சிவாஜி, பத்மினிக்கு பிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம் காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.

நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென, வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.

அதேபோல மோகனாவுடன் மோதி காதலில் விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அதற்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டும்.. இவ்வளவு பாத்திரங்களுக்கும் முக்கியத்துவமே குறையாமல் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைக்கவேண்டும்.

இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.

வெளிப்படையாக சொன்னால், ஒரு நாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலு நாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை. சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாதஸ்வர வித்வான் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.

1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டியோ என்ற அளவுக்கு இருந்தது.

தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையாநாயுடு, நாதஸ்வரம் இசைக்காக நாடியிருந்தது நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.

இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான்.

(தவில் தொல்லையால் தவித்த பாலையாவின் தெரு…

ஜில்ஜில் ரமாமணி ரோலுக்கு நோ சொன்ன மனோரமா

அமெரிக்காவும் ரஷ்யாவும் வியந்த தில்லானா மோகனாம்பாள்

ஏராளமான முன்னாள் ஹீரோக்கள், ஹீரோயின்கள்..

எங்கோ போன எம்பிஎன் சகோதரர்கள் வாழ்வு..

இப்படி பல விஷயங்களுடன் தில்லானா மோகனாம்பாள் படம் டேக் ஆப் ஆனதை வரும் ஞாயிறன்று பார்ப்போம்)