தில்லானா பார்ட் டூ:   மோகனாம்பாள் ஆட ஆரம்பித்த கதை.

(தில்லானா மோகனாம்பாள்..: பொன்விழா ஆண்டு சிறப்புக்கட்டுரையின் இரண்டாம் பாகம்)

கட்டுரையாளர்:ஏழுமலை வெங்கடேசன்

சிவாஜி, பத்மினி, நாகேஷ், பாலையா, மனோரமா, இசையமைப்பாளர் கேவி மகாதேவன் என பெரும்படையோடு தில்லானா மோகனாம்பாள் படத்துக்கான தயாரிப்பை டேக்ஆஃப் செய்தார் இயக்குநர் ஏபி நாகராஜன் என்று ஏற்கனவே கூறியிருந்தோம்.

நாட்டியப்பேரொளி பத்மினிக்கு மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்கதெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா?

இதற்காக தி.மோ படத்திற்கு நாதஸ்வர பின்னணி இசைக்காக புக் செய்யப்பட்டிருந்த மதுரை சகோதரர்கள் எம்பிஎன் சேதுராமன், எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோரே தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்கு மாத ரிகர்சில் பங்கேற்றனர்.

நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக்காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.

தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல் மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.

நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியோ சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய் மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன் முறையாக மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,

தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’

பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம். அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி நலந்தானா பாடலை வரிக்கு அலசினால் அண்ணாவின் உடல் நலத்தை பற்றி கண்ணதாசன் உருகி உருகி விசாரிப்பது தெரிய வரும்.

திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள்.

அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லான மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு

படத்தில் ஆழ்ந்துபார்த்தால், நலந்தானா பாடலில் நாதஸ்வரம், நாட்டியம் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி விட்டு காதலுக்காக உருகும் காதலர்களின் நடிப்பே அதிகம் தெரியவரும்.

நாட்டியமாடியபடியே ’’என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நான் அறியேன்’’ என்று பாடி ‘’புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண்பட்ட பாட்டை யார் அறிவார்?’’ என்று மார்பில் லேசா அடித்துக்கொண்டே கைகளை நெற்றியில் கொண்டுபோய்வைத்து தலையை கவிழ்த்து துயரத்தை பத்மினி வெளிப்படுத்துவார்.

அதைக்காணும் தவில்வித்வான் டிஎஸ் பாலையா, பக்கத்தில் வாசிக்கும் சிவாஜியின் தொடையை லேசாக தட்டி, ‘’எப்படிப்பட்ட பாசக்கார பெண் உனக்கு காதலியா கிடைச்சு உருகு உருகுன்னு உருகராய்யா. உண்மையிலேயே நீ கொடுத்துவச்சவன்யா’’ என்று சொல்லாமல் சொல்வார். இணைப்பில் உள்ள யூடியூப் காட்சியை பார்த்தீர்களானால் அந்த பொக்கிஷமான காட்சி உங்களுக்கு புரியவரும் என்ன மாதிரியான கலைஞர்களெல்லாம் நம் தமிழ் சினிமாவை ஆண்டுவிட்டு போயிருப்பார்கள் என்ற வியப்பே மேலோங்கும்.

தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது.. தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கிவைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.

அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டுபோனகாலமெல்லாம் உண்டு.. பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.

சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும் பாலையாவுக்காக தவில் வாசித்தவர்கள் இருவர்.

ஒருவர், திருவிடைமருதூர் வெங்கடேசன்.. இன்னொருவர் பாலையாவுக்கு பயிற்சி அளித்த, மதுரை டி. சீனுவாசன் என்கிற சீனா குட்டி அவர்கள். திருவிளையாடல் படத்தில், பாட்டும் நானே, பாவமும் நானே.. சிவாஜிக்காக தவிலில் கைவிளையாடிது இவருடையதுதான். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பாடத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாட்டின் ஆரம்பத்தில் அமர்க்களப்படுத்தும் அந்த தவில் பிட்டுகூட சீனு குட்டி அவர்களின் கைவண்ணமே..

இத்தகைய திறமைமிக்க தவில் வித்வான்களின் விரல்கள் பேசிய பாஷையை அப்படியே தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாலையா ஒரு அருவிபோல் பாயவிட்டார்.

அதனால்தான்,தில்லானாவில் ஆரம்ப காட்சியில் வரும் அந்த ஐந்து நிமிட நகுமோ கானலேனிக்கு சிவாஜி எப்படி நாதஸ்வரத்தை அப்படியொரு முகபாவனைகளோடு வாசித்தாரே அதற்கு குறைவில்லாமல் அட்சர சுத்தமாக பாலையாவின் கைகள் தவுலில் கைகள் பேசிய விதத்தைத் கண்டு தவில் கலைஞர்களே வியந்து போனார்கள்.

தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான்.

நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.

ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர் படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?

 

 

அதிலும் மோகனாவின் தாயாராக வடிவாம்பாள் கேரக்டரில் வரும் சிகே சரஸ்வதியும் நாகேஷும் ஒன்றாக தோன்றும் காட்சிகளெல்லாம் அவ்வளவு ஜாக்கிரதையாக, நேர்த்தியாக இருக்கும்படி அமைத்திருந்தார் இயக்குநர் ஏபிஎன் அவர்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் மோகனாவை வளைக்க துடிக்கும் மிட்டாதாரர் நாகலிங்கமான ஈ.ஆர் சகாதேவன்,, சிங்கபுரம் மைனரான பாலாஜி, மதன்பூர் மகாராஜாவான நம்பியார் ஆகிய மூவரிடமும் மோகனாவை கொண்டுசொல்ல வைத்தி போடும் திட்டங்களும் அதற்கு தோதாக மோகனாவின் தாயை ஆடம்பர வாழ்க்கை ஆசைகாட்டி எல்லாவற்றிற்கும் உடன்பட வைப்பதற்காக பேசும் வசனங்களும்..

ஐயோ சிங்கபுரம் மைனர் நிக்கறாரே..என் கால் வலிக்குதே வைத்தி… என்று சிகே. சரஸ்வதி சொல்வதும், பாருங்க. நீங்க நிக்கறீங்க..அவா கால் வலிக்குதுன்றா என்று நாகேஷ் நக்கலடிப்பதும் எத்தனையெத்தனை காட்சிகள்.

மற்ற கேரக்டர்களிடம் டாமினேட் எப்படி செய்யவேண்டும், மாட்டிக்கொண்டால் வெட்கமே படாமல் தரை ரேஞ்சக்கு எப்படி இறங்கிவிடவேண்டும் என்பதற்கெல்லாம் இந்த படத்தின் வைத்தி கேரக்டர்தான் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி,

ஏண்டாப்பா என்று ஷண்முகசுந்தரத்தை ஒருமையில் அழைத்துவிட்டு சிவாஜி முறைத்ததும் பின்வாங்குவதும், முன்பின் அறிமுகமே இல்லாமல் வடிவாம்பாளை முதன் முறையாக சந்திக்கும்போதே சிங்கபுரம் மைனரின் செல்வாக்கை சொல்லி அவரின் தோளைத்தொட்டு பேசும் அளவுக்குபோவதும் எவ்வளவு ஸ்பீடான மூவ்மெண்ஸ் நாகேஷிடம்..

தில்லானா மோகனாம்பாள் படத்துக்காக சிவாஜிக்கு கிடைக்காத விருது.. உள்பட பல தகவல்கள், படைத்த சாதனைகளோடு அடுத்த பகுதியில் புதனன்று பொன்விழா சிறப்புக்கட்டுரை நிறைவடையும்