ஆம் ஆத்மிக்கு மிலிந்த் தியோரா வாழ்த்து: பொறுப்பை உணருங்கள் என்று காங். மறைமுக சாடல்

டெல்லி: கட்சியில் உங்கள் பொறுப்பு என்ன என்பதை உணருங்கள் என்று மிலிந்த் தியோராவை காங்கிரஸ் தலைமை கண்டித்துள்ளது.

அண்மையில் டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் படுமோசமாக தோற்றது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சியின் டெபாசிட் பறிபோனது.

3வது முறையாக அரியணையில் அமர்ந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். அவருக்கு காங்கிரசின் பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களில் முக்கியமானவர் மிலிந்த் தியோரா. இது சமூகவலைதளங்களில் பெரும் விவாதங்களை உண்டு பண்ணியது.

இந் நிலையில், காங்கிரசானது மற்ற கட்சிகளின் வெற்றிகளுக்கு வாழ்த்தும் தலைவர்கள், சொந்த கட்சியில் அவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக காங். செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

மாநிலத்திற்கு வெளியே உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பொறுப்பு என்ன? கட்சிக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பிரதிபலிக்க வேண்டும். சொந்தத் தொகுதியிலும் செயல்திறன், பொறுப்பு குறித்து நினைத்து பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அவரது இந்த பதிவில் எந்த காங்கிரஸ் தலைவர் பற்றிய பெயரையும் வெளியிடவில்லை. ஆனால் தியோரா உள்ளிட்டவர்களுக்கு தான் இந்த அறிவுரை என்று கூறப்படுகிறது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மிலிந்த் தியோராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், இப்போதைக்கு அவர் விலகுவதற்கான எந்த திட்டமும் இல்லை. அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்கிறார் என்பதும் ஊகங்களே, உண்மை அல்ல என்று கூறினர்.