உதகமண்டலம்: தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலா மண்டலமான ஊட்டிக்கு ஒரு புதிய சாலை அமைப்பதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கோடை கொளுத்திய வேளைகளில், சுமார் 10.5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை தந்தார்கள். இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட 53,000 அதிகம்.

தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஒரு சாலையும், கோத்தகிரி வழியாக இன்னொரு சாலையும் ஊட்டிக்கு சென்றடைவதற்காக பயன்பாட்டில் இருக்கிறது.

தற்போது, மற்றொரு புதிய சாலை அமைப்பதற்கான திட்டமிடலும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், மேற்கூறிய இரண்டு சாலைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம் என்று கூறப்டுகிறது.

இந்தப் புதிய சாலை 94 கி.மீ. நீளம் கொண்டதாகவும், ரூ.50 கோடி செலவில் அமையவுள்ளதாகவும் இருக்குமாம். ஆனால், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தனி கணக்கு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அடங்கிய கோபனாரி, நெல்லிதுறை மற்றும் மேலூர் சாய்வு போன்ற வனப்பகுதிகளும், நீலகிரி மாவட்டத்தில் அமைந்த வனப்பகுதியான ஹிரியசீகை வனப்பகுதியும் இந்த சாலைத் திட்டத்தால் அழியும். அழிவிற்குள்ளாகும் மொத்த வனப்பகுதி 61 ஏக்கர்கள்.