சென்னை:

நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களில் விற்பனை அமோகமாக அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 35 இரு சக்கரவாகனங்கள் சாலைகளில் பயணிக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 150 சதவிகிதம் அதிக அளவில் வாகனங்கள் விற்பனை நடைபெற்றுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து சேவைகளின் குறைபாடு காரணமாகவே இரு சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாகனங்களுக்கான விரை வான கடன் வசதி, பார்க்கிங் பிரச்சினை போன்றவை காரணமாக இரு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, சாலை வசதி உள்பட, பேருந்துகளை மக்கள் எதிர்பார்க்காமை போன்றவற்றால், நஷ்டத்தில் இயங்கி வந்த 1400க்கும் மேற்பட்ட அரசு பேருந்து சேவைகளை ரத்து செய்துள்ளதாக, தேவையான இடத்தில் மினி பேருந்து இயக்கப்படும் என்றும்  தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் உயர்வு, மற்றும் ரூ .100 பாஸ் விநியோகிப்பதை நிறுத்தியது. பஸ் டிக்கெட் மற்றும் ஆட்டோக்களுக்கு ரூ .150 அல்லது அதற்கு மேல் செலவிடுவதற்கு பதிலாக, இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வது  நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்துவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அதுபோல சென்னையில் உள்ளூர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் பயணிகளின் தேவைக்கேற்ப இல்லாத நிலை ஏற்படுவதாகவும், பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) மற்றும் ஈசிஆர்  புறநகர்ப்பகுதிகளுக்கு செல்ல தேவையான வாகன வசதிகள் கிடையாது என்றம், வளர்ந்து வரும் சென்னை புறநகர் பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி இல்லை என்பதால், அனைவரும் இரு சக்கர வாகனத்தையே விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தை பொறுத்தவரை வாகன விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாகவும், இது கடந்த ஆண்டை விட 150 சதவிகிதம் அதிகரித்துஉள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு நபருக்கும் ஒரு இரு சக்கர வாகனங்கள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த  2009ம் ஆண்டு 18 லட்சம் இருந்த இரு சக்கர வாகனங்கள் தற்போது  45 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும், இது நாட்டிலேயே 3வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே அதிக இரு சக்கரவாகனங்கள் உள்ள மாநலிம் டில்லி என்றும், இங்கு 70லட்சம் வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், அதைத்தொடர்ந்து, பெங்களூரில் 50 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளதாகவும், 3வது இடத்தில் சென்னை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.