மாசித் திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொடியேறியது….

தூத்துக்குடி:

மாசித் திருவிழாவையொட்டி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று அதிகாலை கொடியேறியது…

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் மாசித் திருவிழா முக்கியமானது. 12 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூரில் குவிவது வழக்கம்.

மாசித்திருவிழா இன்று தொடங்கியதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசணமும்,  2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும்நடைபெற்றது. பின்னர், காலை 5.30 மணியளவில் கோயில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோவில்அதிகாரிகள் முக்கிய நபர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, ஏப்ரல் 10ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 3-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் இரவு 7.30 மணியளவில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது.

ஏப்ரல் 5-ம் தேதி ஏழாம் திருவிழாவன்று, அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் அருள்மிகு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்குள் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

ஏபர்ல 6-ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை சுவாமி பெரிய வௌ்ளிச்சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் வந்து, அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் சுவாமி பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் சேருகிறார்.

ஏப்ரல் 8-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 9-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

ஏப்ரல் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

கார்ட்டூன் கேலரி