திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழா 28ந்தேதி தொடக்கம்….

தூத்துக்குடி:

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படையான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்கி10.3.2020–ந் தேதி வரை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அருள்மிகு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா பிப்ரவரி 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கொடி ஏற்றப்படுகிறது.

தினசரி சிறப்பு பூஜைகளுடன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.  இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, மார்ச் 5ந்தேதி சிவப்புசாத்தி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து  மார்ச் 6ந்தேதி பச்சை சாத்தியும் பக்தர்கள் பரவசப்படுத்துகிறார்.

தொடர்ந்து மார்ச் 8ந்தேதி திருத்தேர் விழா நடைபெறுகிறது.  இறுதி நாளான 9ந்தேதி தெப்பத்தேர் விழா நடைபெற உள்ளது.  10ந்தேதி சிறப்பு பூஜையுடன் விழா நிறைவுறுகிறது.

மாசித்திருவிழாவையொட்டி,  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,  குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தருவது குறித்து  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி,  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதனால் உருவாகும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட கோவில் பகுதியிலும், பேரூராட்சி பகுதியிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு கூடுதல் வாகனம் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

கடலில் அதிக நபர்கள் குளிப்பதால் மீன்வளத்துறை மூலம் படகுகள் மற்றும் அவசர காலத்தில் உதவும் வகையில் மீனவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

கார்ட்டூன் கேலரி