தண்ணீரில் மிதக்கும் திருமழிசை.. கண்ணீரில் மிதக்கும் வியாபாரிகள்… வீடியோ

சென்னை:

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில்  கடந்த சில நாட்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை பெய்து வருவதால், பூந்தமல்லி அருகே தற்காலிக காய்கறி சந்தையான திருமழிசை சந்தை  சேறும், சகதியுமாகி குளம் போல நீர் தேங்கியுள்ளதால், காய்கறிகள் மழையில் நனைந்தும், தண்ணீரிரில் மூழ்கியும் வீணாகி வருகின்றன. இதனால் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருவதாக  வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் கொரோனா பரவலுக்கு மூலக்காரணமான செயல்பட்ட கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதைத் தொடர்ந்து,  கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்காக, பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில் தமிழக அரசு சார்பில்  தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறி மொத்த சந்தை   செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே புன்செய் நிலமான அந்த பகுதியில், அவ்வப்போது பெய்து மழை காரணமாக, மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி வருவதாலும்,  காய்கறிகளை பத்திரப்படுத்தி வைக்க போதுமான வசதிகள் செய்யப்படாததாலும், நாள்தோறும் லட்சக்கணக்கான டன் காய்கறிகள் அழுகி வீணா வருவதுடன் வியாபாரிகளுக்கும் லட்சக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையின்போது காய்கறிகள் மழைநீர் பட்டு வீணான நிலையில்,  தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக இரவு மற்றும் காலை நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி இருப்பதுடன் கொசு பரவும் அச்சமும், சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்த நிலையில்,  மழை காரணமாக திருமழிசை சந்தையில் நீர் தேங்கி வருவதால், அங்கு வியாபாரம் செய்யும் மொத்த வியாபாரிகள் சொல்லோனா துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

காய்கறி இறக்கி பாதுகாப்பாக வைக்க போதுமான வசதிகளை அரசு செய்துகொடுக்காததால், கடைகள் அருகே  அடுக்கி வைக்கப்பட்ட  காய்கறி மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தது மட்டுமின்றி, நீர் தேங்கி குளம்போல உள்ளதால், அந்த   நீரில் மூழ்கி நாசமாகி வருகின்றன. மார்க்கெட் வளாகம் முழுவதும் நீர் நிரம்பி குளம் காட்சி அளிக்கிறது.

இதனால் தினசரி டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி வருவதாகவும், தங்களுக்கு நாள் தோறும் லட்சக்கணக்கில் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் உடனே நடவடிக்கை எடுத்து, வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும் அல்லது, தங்களக்கு, முன் கோயம்பேட்டில் சந்தையை இயக்க அனுமதி தர வேண்டும் என்று வியாபாரிகள் கண்ணீரோடு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகஅரசு கவனிக்குமா?