சென்னை:
சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாகி குளம் போல நீர் தேங்கியுள்ளதால், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்காக, பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு, காய்கறி மொத்த சந்தை   செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையின்போது,  கடைகள் அருகே  அடுக்கி வைக்கப்பட்ட  காய்கறி மூட்டைகள் அனைத்தும்  நீரில் மூழ்கி நாசமாகின. மார்க்கெட் வளாகம் முழுவதும் சேரும், சகதியுமாக மாறியதால், வியாபாரிகள் காய்கறிகளை இறக்கி வைக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டனர். அதையடுத்து, மாவட்ட கலெக்டர் அங்கு வந்து நேரடி ஆய்வு செய்து,  தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆனால்,  சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருமழிசை உள்பட பல பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால் மார்க்கெட் வளாகம் முழுவதும் நீர் நிரம்பி குளம் காட்சி அளிக்கிறது.
ஏற்கனவே காய்கறிகளை பாதுகாத்து வைக்க இடம் இல்லாததால், டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி வரும் நிலையில், தற்போது மழை காரணமாக மேலும் காய்கறிகள் அழுகி வீணாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிஎம்டிஏ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து,  சந்தையை சீரமைத்து தர வேண்டும் அல்லது கோயம்பேட்டில் சந்தையை இயக்க அனுமதி தர வேண்டும் என்று வியாபாரிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.