கடந்த 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் இணைந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஒரு விஷயத்தை பேசிவந்தார்.

அதாவது, கூட்டணி பலமில்லாமல் திமுகவை நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்குவதற்கு சில அரசியல் சக்திகள் முயன்று வருகின்றன. திமுக தனித்து நின்றாலே வெற்றிபெறும் என்பதாக வெளியிடப்படும் கருத்துகளை திமுக நம்பி மோசம் போய்விடக்கூடாது என்பதாக அவர் திமுகவை எச்சரித்தார்.

ஆனால், இந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணியை அவர் திமுகவிடம் உறுதிசெய்யும்போது, அவரை, வேறுசில அரசியல் சக்திகள் அளவுக்கு அதிகமாகவே சொறிந்துவிட்டார்கள் என்பதே உண்மை. இந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி விஷயத்தில், திருமாவளவனிடம் திமுக சற்று பணிந்து போயுள்ளது என்பதே உண்மை.

விசிகவுக்கு வெறும் 6 இடங்களை மட்டுமே கொடுத்து திமுக அவமானப்படுத்திவிட்டது. எனவே, திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும், விசிக தலைவருக்கு தன்மானமில்லையா? என்றெல்லாம் திருமாவை அதிகம் சொறிந்தார்கள் எதிர் அரசியல் சக்திகள்.

திமுகவிடம் திருமாவும் சற்று வீறாப்புடன் நடந்துகொண்டது உண்மைதான். அதேசமயம், 6 இடங்களை ஏற்றுக்கொண்டு, அனைத்திலும் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்ற நிபந்தனையையும் திமுகவை அக்கட்சி ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது.

விடுதலை சிறுத்தைகளின் வாக்குவங்கி என்பது இதுதான் என்று எப்போதுமே நிரூபிக்கப்பட்டது கிடையாது. பெரிய கட்சிகளின் கூட்டணியில்லாமல், அவர்கள் எந்த தேர்தலிலும் வென்றது கிடையாது. அதேபோன்று, அவர்களுக்கு பொதுவெளியில் வாக்குகள் விழுவது அவ்வளவு எளிதானதும் அல்ல!

இதையெல்லாம் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்ட திருமாவளவன், தன் கட்சி, தொகுதிபேர அரசியலில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் விளையும் பாதகங்களையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அந்தவகையில், ஒருகாலத்தில், திமுகவுக்கு இவர் எந்த அறிவுரையை வழங்கினாரோ, அந்த அறிவுரையை தன்னளவிலும் புரிந்தே நடந்துகொண்டுள்ளார்.

அதன்மூலம், தன்னை அளவுக்கதிகமாக சொறிந்த ரத்தம் வரவைக்க முயன்றவர்களின் முயற்சிகளை தோல்வியடைய செய்துள்ளார்.