முதல்வர் பழனிசாமிக்கு   திருமாவளவன் பாராட்டு:  அதிமுகவுக்கு சமிக்ஞையா? தி.மு.க.வுக்கு எச்சரிக்கையா?

“ஆட்சியையும் கட்சியையும் சிறப்பாக தலைமையேற்று நடத்துகிறார்!” என்று   முதல்வர் பழனிசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு, திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவர், “ பட்டியலினத்தவர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து வருத்தமளிக்கிறது.  அதே நேரம் அவரது வகாரம் தொடர்பாக, வி.சி.க. நிர்வாகி வன்னியரசு சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தை, நீக்குமாறு தான் அறிவுறுத்தினேன். இதையடுத்து  அந்த பதிவு உடனடியாக  நீக்கப்பட்டது.  அந்த பதிவு தொடர்பான பின்னணியில், தான் இருப்பதாக மற்றவர்கள் கூறினாலும், வைகோ அவ்வாறு கூறியிருக்க மாட்டார், என கருதுகிறேன் நான் அவ்வாறு செய்யக் கூடியவன் அல்ல, என்பது வைகோவுக்கு நன்றாக தெரியும்,.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட முடியாது., அவர் ஆட்சியையும் கட்சியையும் திறம்பட நடத்துகிறார். . ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் கூறிய நிலையில், ஆட்சியை தக்க வைத்து சிறப்பாக நடத்துகிறார்”  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

ஏற்கெனவே, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்” என்று திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவர் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வுடன்தான் திருமாவளவன் தலைமையிலான வி.சி.க. இணக்கமாக இருக்கிறது.  ஆனால் இது நட்புதான். கூட்டணி அல்ல என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். இதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். அதன் பிறகும் விசிக தங்கள் கூட்டணியில் இருக்கிறது என்று உறுதியாக ஸ்டாலின் கூறவில்லை.

மேலும், கூட்டணியில் இணைய வேண்டும் என்றால் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்  என்று திருமாவளவனை தி.மு.க. நிர்ப்பந்திப்பதாகவும் அதற்கு திருமாவளவன் உடன்படவில்லை என்றும் ஒரு தகவல் உலவுகிறது.

இந்த நிலையில், “பினாமியாக செயல்படக்கூடாது” என்று தமிழக முதல்வரை விமர்சித்த திருமாவளவன் தற்போது பாராட்டி இருக்கிறார். குறிப்பாக கஜா புயல் நிவாரணத்தில் ஆளும் அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை என்றும் மேகதாது அணைக்கட்டு விசயத்திலும் சரியான முறையில் செயல்படவில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வரும் நிலையில், திருமாவளவன் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வில் உரிய மரியாதை கிடைக்காத நிலையில் அ.தி.மு.கவுக்கு சமிக்ஞை அளிக்கும் விதமாக திருமாவளவன் பேசியிருக்கிறார் என்று ஒரு யூகம் பரவிவருகிறது.  இன்னொரு பக்கம், திருமாவளவன் தி.மு.க. அணியில்தான் இருப்பார். அதே நேரம் அந்த அணியில் உரிய அங்கீகரம் கிடைக்காவிட்டால் மாற்று வழியைத்தேடுவோம் என்று  திமுகவுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படி பேசியிருப்பார் என்றும் ஒரு யூகச்செய்தி உலவுகிறது.