‘கொரோனா ஹாட்ஸ்பாட்’ ஆக மாறிவரும் திருமழிசை, மாதவரம் மார்க்கெட்டுகள்….

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டானதைத் தொடர்ந்து, சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. 

அதுபோல,  தற்காலிக  மார்க்கெட்டுகளான திருமழிசை, மாதவரம்  மார்க்கெட்டுகளும் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பரவல் அதிகரிப்புக்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்பது தெள்ளத்தெளிவாக அறிய முடிந்தது. ஆனால்,  வணிகர்களும், மாநில அரசும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில  அரசு,  அதை கண்டுகொள்ளாமல்விட்டது ஏன்? நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்தது யார்? என  அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் துளைத்தெடுத்து வருகின்றனர்.

இந்த  பஞ்சாயத்துகளே இன்னும் முடிவடையாத நிலையில், கோயம்பேட்டை மூடிய தமிழகஅரசு, அதற்கு பதிலாக சு அமைத்துள்ள தற்காலிக மார்க்கெட்டுகளான திருமழிசை மார்க்கெட்டும், மாதவரம் மார்க்கெட்டும், கோயம்பேடு மார்க்கெட்டைப் போல  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அவலம் அரங்கேறி வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பூ மற்றும் பழக்கடை மார்க்கெட் கடந்த வாரம் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு  மாற்றப்பட்டது. ஆனால், அங்கு அரசு அமைத்து கொடுத்துள்ள தற்காலிக கடைகளில், வியாபாரிகள் கடைகள் நடத்தாத நிலையில், பேருந்து நிலையத்திற்கு வெளியே  அடுத்தடுத்து சமூக விலகல் இன்றி கடைகள் நடத்தப்பட்டு விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது.

இந்த மார்க்கெட்டில் தினசரி சில்லறை வியாபாரிகள்  நூற்றுக்கணக்கா னோர் எந்தவித பாதுகாப்பும் இன்றி பூக்களை வாங்கிச் செல்வதால், இந்த மார்க்கெட்டும், கோயம்பேடு போல  கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறி விடுமோ என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பகுதியில் காவல்துறையினர் பணியில் இருந்தும், சமூக விலகல் தொடர்பாக அவர்கள் எந்தவித அறிவுறுத்தலும் செய்யாமல் அமைதியாகவே இருந்து வருகிறார்கள்..

அதுபோல, திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளிலும்,மொத்த வணிகர்களும், அங்கு காய்கறிகள் வாங்கச் செல்லும் சிறு வணிகர்கள் உள்பட எவருமே முகக்கவசம் உள்பட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் அணிவதில்லை.

இதுகுறித்து பல முறை எச்சரிக்கை விடுத்தும், பெரும்பாலோர் அதை கண்டுகொள்ளாத நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கடந்த 2 நாட்களுக்கு  முன்பு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து, வணிகர்களுக்கு  பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தவர், பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகளில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்தால் கடைகள் பறிமுதல் செய்யப்படும்.

சமூகஇடைவெளியை முழுமையாக கடைபிடிக்காத உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், முக கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால், அவரது அறிவிப்பும் காற்றில் கரைந்துபோனது. தற்போதும், அங்கு வணிகர்கள் எந்தவித பாதுகாப்பையும் கடைபிடிக்காத நிலையில், திருமழிசை மார்க்கெட்டும், மீண்டுமொரு கோயம்பேடு மார்க்கெட் போல கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மார்த்தட்டிக் கொள்ளும் எடப்பாடி,  கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் கோட்டைவிட்டதுபோல, தற்போதும் குறட்டைவிட்டுக்கொண்டிருப்பது, அங்கு நடைபெற்று வரும் தினசரி நிகழ்வுகளால் உறுதியாகி வருகிறது.

கவனித்து  நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழகஅரசு, அதை, கவனிக்காமல் குறட்டை விட்டுக்கொண்டு,  பின்னர் கொரோனா பாதிப்பு உறுதியானபிறகு, லபோ திபோவென அலறிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது  ஆட்சியாளர் களுக்கு பெருமை சேர்க்காது…

தற்போதைய  நிலையில், மாதவரம் தற்காலிக மார்க்கெட் மூலம் சிலருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக உறுதிப்படாத தகவல்களும் வெளியாகி வருகின்றன. இது சென்னை மக்களிடையே மேலும் பீதியை கிளப்பி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னையில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. திருமழிசை, மாதவரம் உள்பட சென்னையில் ஆங்காங்கே மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுப்பதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்..

சென்னையில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் எடப்பாடி அரசு  தடுக்கப்போகிறதா அல்லது எப்போதும்போல வணிகர்களின் மிரட்டலுக்கு பயந்து பதுங்கப்போகிறதா…

பொறுத்திருந்து பார்ப்போம்…

கார்ட்டூன் கேலரி