திருமுருகன் காந்தி மீது கடுமையான “ஊபா” சட்டம் பாய்ந்தது! வ.கவுதமன் கண்டனம்!

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மீது கடுமையான ஊபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை, எட்டுவழிச்சாலை போன்ற மத்திய, மாநில அரசுகளின் சில திட்டங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் மே 17 இயக்கத்தின்  திருமுருகன் காந்தி.

சமீபத்தில் ஐநா சபையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பாக, பேசிவிட்டு திரும்பினார். அப்போது  பெங்களூரு விமான நிலையத்தில், அவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கின் அடிப்படையில் அவரை சிறையில் அடைக்க முகாந்திரம் இல்லை என்று சென்னை சைதாபேட்டோ நீதிமன்றம் தெரிவித்தது.

உடனடியாக திருமுருகன்காந்தி மீது, அனுமதி இன்றி பெரியார் சிலைக்கு மாலையிட்டதாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை. மேலும் பல்வேறு பழைய வழக்குகளை, திருமுருகன் காந்தி மீது பதிந்தது.

இந்த நிலையில், திருமுருகன் காந்தி மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017 செப்டம்பர் மாதம், திருமுருகன் காந்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, பாலஸ்தீனம் போல, தமிழ்நாட்டிலும் போராட்டம் நடைபெறும் என பேசியதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருமுருகன் காந்தி

அதாவது, சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு பிரிவு ஊபா (UAPA) 13 (1) (b) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Unlawful Activities (Prevention) Act சுறுக்கமாக UPA என்று அழைக்கப்படும் இந்த சட்டத்தின்கீழ், கைது செய்யப்படும் ஒருவரை 6 மாதங்கள் வரை விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்க முடியும். அதுவரை ஜாமீன் பெற முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம், 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். தடா, பொடா சட்டங்கள் போன்ற கடுமையான சட்டம் இது.

கவுதமன்

திருமுருகன்காந்தி மீது ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டது குறித்து, இயக்குநர் கவுதமன் இதுபற்றி கூறுகையில், தமிழர் உரிமை, தமிழ் நாட்டு வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக, போராடுபவர்கள் வரிசையாக ஒடுக்கப்படுகிறார்கள். என்மீது கூட 40 வழக்குகள் பதிவு செய்திருக்கிறார்கள்.  அரியலூரில் தங்கியிருந்தபடிதான் கையெழுத்து போட்டு வருகிறேன். கையில் ஆயுதம் வைத்திருக்கும் தீவிரவாதிக்கு எதிராக போடப்படும் வழக்குதான் UPA. மிக கடுமையான சட்டம் இது. கருத்துரிமை பேசியவருக்கு எதிராக இந்த சட்டத்தை பிரயோகித்துள்ளது ஏன் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

You may have missed