திருநாவுக்கரசர் பாஜகவுக்கு செல்லலாம்!: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கு

திருநாவுக்கரசர் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்குச் செல்லலாம் என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியை அக்கட்சி நடத்துகிறது. இதில் அகில இந்திய அளவில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு, அழைப்பிதழில் அவரது  பெயரும் இடம் பெற்றிருக்கிறது.

அதே நேரம் அவர் வருவாரா அல்லது தன் சார்பாக வேறு யாரையாவது அனுப்புவாரா என்பது தெரியவில்லை. இதற்கிடையில், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வுக்கு அமித்ஷாவை அழைத்தது  தவறு என்று தி.மு.க. ஆதரவாளர்கள் சிலரும்கூட கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

“அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கும் அழைப்புவிடுத்திருக்கலாம்” என்று தி.மு.க.வின் அதிதீவிர ஆதரளவாளரான சுப.வீரபாண்டியன்கூட தெரிவித்திருக்கிறார்.

மேலும், தி.மு.க. நிகழ்வில் பா.ஜ.க. தேசிய தலைவர் கலந்துகொள்வது எதிர்காலத்தில் கூட்டணிக்கு அச்சாரமாக இருக்குமோ என்கிற யூகமும் அரசியல்வட்டாரத்தில் நிலவுகிறது.

இது தற்போது தி.மு.க.வுடன் இணக்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சியிலும் எதிரொலித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “கருணாநிதியின்  நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பதால், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப் போவதாக அர்த்தமில்லை” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுப்பதுபோல இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:

“திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகி தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட மீண்டும்   பாஜகவுக்கு சென்றால் அவருக்கு அங்கு நல்ல எதிர்காலம் உண்டு.

இப்போதும் கூட அதிக காலத் தாமதம் ஆகிவிடவில்லை. அவர்  மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்குச் செல்லல்லாம்.  அப்படிச் சென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு”  என்றார். இளங்கோவனின் இந்தக் கருத்து காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.