திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆபரணங்களை சரி பார்க்கும் திருவாபரண ஆய்வு பணி ஆரம்பம்

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கி வரும் தங்கம், வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி இன்று தொடங்கியது.

தேவஸ்தான கஜானாவில் சேர்க்கப்படும் இந்த நகைகள் சரிபார்க்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் சரி பார்க்கும் பணி தொடங்கி உள்ளது.

இதற்காக  கருவறையான ஆனந்த நிலையத்தில் இருந்து திருவாபரண பெட்டிகள் எடுத்து வரப்பட்டு ஸ்ரீராமர் மேடையில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நிபுணர் குழுவினர் நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். முடிவில் மூலவருக்கு அணிவிக்கப்படும் நகைகள் சரி பார்க்கப்பட்டு வருகிறது.

பதிவு புத்தகத்தில் உள்ளபடி நகைகள் உள்ளதா? அதில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டுள்ளதா? அன்றைய நிலவரப்படி நகைககளின் எடை உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வுப்பணிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

உலகின் பணக்கார தெய்வமான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சொந்தமாக டன் கணக்கில் தங்கம், வெள்ளி மற்றும் வைரத்திலான ஆபரணங்கள் உள்ளன.

அந்த கால ராஜாக்கள் முதல் இந்தகால ராஜாக்கள் வரை லட்சக்கணக்கானோர் வழங்கி உள்ள சுமார் 50 டன் எடையுள்ள தங்க ஆபரணங்கள், முப்பது டன்னுக்கும் மேற்பட்ட வெள்ளி பொருட்கள், கோடிக்கணக்கான மதிப்புடைய வைரங்கள் ஆகியவை கருவறையில் சேமிக்கப்பட்டு பலத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.

விலை மதிப்பற்ற அந்த ஆபரணங்களின் புராதான மதிப்பு மற்றும் அவற்றில் பதிக்கப்பட்டுள்ள மிகப்பழமையான நவரத்தினங்களின் மதிப்பு ஆகியவற்றை தற்போதைய மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில் மதிப்பிட இயலாதது.

இந்த நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோவில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஆகிய கோவில்கள் உட்பட தேவஸ்தானத்திற்கு சொந்தமாக இருக்கும் அனைத்து கோவில்களி லும் சுவாமி அலங்காரத்தில் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள திருவாரணங்கள் குறித்து,  அங்குள்ள திருவாபரண பட்டியலில் எழுதப்பட்டுஉள்ளன.

இந்த பட்டியலின்படி ஆபரணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாக என ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. சுமார்  15 நாட்கள் நடைபெறும் திருவாபரண சரிபார்ப்பு பணி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான கருவூல துணை நிர்வாக அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.