கொரோனா முன்னெச்சரிக்கை : திருப்பதி கோவில் வரும் 31 வரை மூடப்படுகிறது

திருப்பதி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருப்பதி கோவில் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  மக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் கேட்டுக் கொண்டுள்ளது.  அதையொட்டி மெக்கா, வாடிகன் போன்ற தலங்கள் மூடப்பட்டுள்ளன.   இந்தியாவில் பல சுற்றுலாத்தலங்கள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களும் மூடப்பட்டுள்ளன.

தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வரும் திருப்பதி கோவிலுக்குப் பக்தர்கள் அதிக அளவில் வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   ஆயினும் சென்ற வாரம் வழக்கம் போலவே கூட்டம் காணப்பட்டது.  இன்று மலைப்பாதை ஏறி வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மலைப்பாதை மூடப்பட்டது.

இன்று சுகாதார அமைச்சர் அல்லா காளி கிருஷ்ண சீனி வாசை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார்.  அப்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்கள்,  தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களை வரும் 31 வரை மூட முடிவு செய்யப்பட்டது.  அதையொட்டி திருப்பதி கோவிலும் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுகிறது.