டில்லி:

சென்னையில் 2வது விமான நிலையம் திருப்போரூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், அந்த பகுதியை  ஆய்வு செய்த விமான நிலைய ஆணையம் அதிகாரிகள், அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.

சென்னை விமானநிலையத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவு வருவதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்க  ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா திட்டமிட்டது.

கடந்த ஆண்டு சென்னைக்கு வந்திருந்த விமான நிலைய ஆணையத்தின் தலைவர், தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்கள் இறங்க முடியவில்லை. இதனால், சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். 2வது விமான நிலையம் அமைக்க தகுதியான, சரியான இடத்தை தேர்வு செய்து தருமாறு  தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாநில அரசு தேடி வந்தது. அதன்படி, திருப்போரூர், மப்பேடு, மதுரமங்கலம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் என ஆறு இடங்களை தேர்வு செய்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் வழங்கியது.‘

தமிழகஅரசின்  கோரிக்கையை தொடர்ந்து ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரிகள்  குழு, திருப்போரூரில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு தொடர்பாக அறிக்கை அளித்துள்ளது.

அதில், திருப்போரூர் பகுதியானது, கல்பாக்கம் அணுசக்தி நிலையத்துக்கும், தாம்பரம் விமானப்படை தளத்திற்கும் அருகே அமைந்துள்ளது. இது பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி விடும் என்றும், இங்கு விமானநிலையம் அமைக்கப்பட்டால், தாம்பரம் விமானப்படை தளத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள், விமான ஓடுதளம் அமையும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் (திருப்போரூர்) விமானநிலையம் அமைய வாய்ப்பில்லை என்று  ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மறுத்துள்ளது.

இதனையடுத்து, மற்ற இடங்களான மப்பேடு, மதுரமங்கலம், செய்யாறு, தோடூர் மற்றும் வலத்தூர் இடங்களை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.