சென்னை:

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க தமிழகத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. அதன்படி,    திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, மேலும் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் மேலும்  3 அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி கேட்டு தமிழக சுகாதாரத்துறை மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தநிலையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைக்கமத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மருத்துவக்கல்லூரிகள்,  தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாகவும்,  இதில் தமிழக அரசின் பங்கு ரூ.130 கோடி என்றும், மத்திய அரசு தன் பங்காக  ரூ.195 கோடி ஒதுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது, 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அறிவிக்கப் பட்ட 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 3 புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் மொத்தம் 33 மருத்துவக் கல்லூரிகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதன் காரணமாக, மேலும் 450 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதன் மூலம் மொத்த மருத்துவப்படிப்புக்கான இடங்கள் 4,600 ஆக உயர்கிறது.