திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் தொழிற்சாலை  கழிவுநீர்த் தொட்டியை துப்புரவு செய்த தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அடுத்து, காக்களூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ரசாயனம் தயாரிக்கும் தொழிற் சாலையில்  உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில்,  புட்லூர் பகுதியைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி   வேலவன் (40) மற்றும் சந்துரு (35) ஆகிய இருவரும் மயக்கம் அடைந்தனர்.

இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்த தீயணைப்பு துறையினர்,  கழிவுநீர்த் தொட்டியில் இறங்கி மயக்க நிலையில் இருந்த இருவரையும் மேலே தூக்கி வந்த பரிசோதித்தப் போது, இருவரும்  உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, வருவாய் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.