சியாம்ரீப்: கம்போடியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக திருக்குறள் மாநாட்டின் ஒருபகுதியாக, திருவள்ளுவரின் சிலை அந்நாட்டின் சியாம்ரீப் நகரில் நிறுவப்படவுள்ளது.

கம்போடியாவில் அங்கோர் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும், உலகப் பொதுமறையாம் திருக்குறள் கெமர் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு திருக்குறள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த திருக்குறள் மாநாட்டில் சுமார் 200 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் உள்பட ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, நார்வே, மலேசியா, மியன்மார், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்களும் திருக்குறள் ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்வர் என்றும் கூறப்படுகிறது.

பங்கேற்பாளர்களில், சுமார் 100 பேர் மாநாட்டில் கட்டுரைப் படைப்பர். கம்போடியாவின் அனைத்து அரசுத் துறைகளும் அமைந்துள்ள அரசு வளாகத்தில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்படவுள்ளதாக அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் இரமேஷ்வரன் தெரிவித்தார்