திருவனந்தபுரம் :

கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் முடவன் முதல் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்ட கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் 549 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரை மேயர் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்த நிலையில் இதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன.

மொத்தமுள்ள 100 ஓட்டுகளில் 54 வாக்குகள் பெற்று மேயர் தேர்தலில் ஆர்யா வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஆர்யா ராஜேந்திரன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

ஆர்யா, திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து ஜெயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. (கணிதம்) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுவர் பிரிவான ‘பாலசங்கம்’ அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஆர்யா, இந்தியாவில் இளம் வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் மேயர் ஆவார்.

இந்நிலையில் “உலகில் இளம் வயதில் பெரிய நகரத்துக்கு மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண், ஆர்யா” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இவரது குரு- கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயன். ஆர்யா, நடிகர் மோகன்லாலில் ரசிகை ஆவார். முடவன் முதல் வார்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஆர்யாவுக்கு முதல் ஆளாக மோகன்லால் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

“மேயராக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் கல்லூரி படிப்பை தொடருவேன்” என மேயர் பதவி ஏற்றதும் ஆர்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

– பா. பாரதி