மூன்றாக பிரிக்கப்பட்ட திருவான்மியூர் மார்கெட்…

சென்னை :

கோயம்பேடு மார்கெட்டை மூன்றாக பிரிக்க ஊரடங்கு செயல்படுத்தபட்டு ஒரு மாதம் கழித்து நடத்திய கூட்டத்திற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து பல கடைகள் மூடப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் இழந்த தமிழகத்தின் வடமாவட்டங்களைச் சேர்ந்த சுமைதூக்கும் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல, தற்போது கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், திருவான்மியூரில் உள்ள மார்கெட்டில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் மார்கெட் பகுதி மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அளித்திருக்கும் விளக்கத்தில் , திருவான்மியூர் மார்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தியதாகவும், இனி அவர்கள் வியாபாரம் செய்ய வடக்கு மாட வீதி, கிழக்கு மாட வீதி, பார்க்கிங் பகுதி ஆகிய மூன்று இடங்களில் கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட மார்கெட் பகுதிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க மூடப்பட்டுள்ளது.  அதுபோல் , அங்கிருந்த வியாபாரிகளுக்கு மேலும்  இரண்டு இடங்கள் தேர்வாகி அங்கும் கடைவைத்துக்கொள்ள இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரிகளால் அனுமதியளிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.

இதுபோல், அசோக்நகர் பகுதியில் கோயம்பேடு மார்கெட்டில் இருந்து புதிதாக இங்கு காய்கறி வியாபாரம் செய்ய துவங்கிய 2 பேரிடம் இருந்து அவர்களிடம் பழகிய 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும், வடபழனி மார்கெட்டும் ஏப்ரல் 20 முதல் மூடப்பட்டுள்ளது.

வடசென்னை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற புது வியாபாரிகள் புற்றீசல் போல் முளைத்துவருவதை அரசு மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொண்டு சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் அரசே நேரடியாக நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்வதை அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விற்பனையை வரன்முறைபடுத்தினால் மட்டுமே மார்கெட் தொகுதி வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.