திருவண்ணாமலை தேரோட்டம்: கொள்ளையில் ஈடுபட்ட 4பெண்கள் உள்பட 9 பேர் கைது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை மகா தீபம் நாளை மறுதினம் ஏற்றப்பட உள்ள நிலையில் நேற்று பிற்பகல் பிரமாண்ட தேரோட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடத்தை பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

இந்த நிலையில் பக்தர்கள்  கூட்டத்திற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக ஆந்திர மாநிலத்தைசேர்ந்த 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள திருவண்ணாமலை கோயிலில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நேற்று காலை வெள்ளித் தேரோட்டம், 63 நாயன்மார்களின் திருவீதி உலா மற்றும் விநாயகர், முருகர் தேரோட்டம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து பிற்பகலில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் கோயில் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் நெரிசலுக்குள் புகுந்து அவர்களின் செல்போன்கள், பர்ஸ்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக 4  பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். .

தேரோட்டத்தை ஒட்டி மாட வீதிகள் முழுவதிலும் 2,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.