போராடாதீர்கள்!: மாணவர்களுக்கு திருவண்ணாமலை எஸ்.பி. எச்சரிக்கை

“போராடினால் எதிர்காலம் பாழாகிவிடும்” என்று மாணவர்களுக்கு திருவண்ணாமலை எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலையானது, சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியே அமைய  இருக்கிறது. இந்த சாலைக்கு அந்தந்த மாவட்டங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. இது விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி  உள்ளது.

இதனால் விவசாயிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,   நடத்தி வருகின்றனர். அதில் பலர் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.  பலர் தங்கள் விளை நிலங்களில் நட்ட கற்களை பிடுங்கி எறிகின்றனர். கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. அதனால் இந்த 5 மாவட்டங்களும் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கின்றன.

இந்த நிலையில் எட்டுவழி சாலை  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அதேபோல, திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாணவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அதாவது ஜூலை 1-ம் தேதி போராட்டம் நடத்த போவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவ ஆரம்பித்தன. இது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், இன்று திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு மாவட்டத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்களை அழைத்து பேசினார். அப்போது, “சமூக வலைளதங்களில் மாணவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வரும் செய்தியினை யாரும் நம்ப வேண்டாம். இவை வதந்தியே.  அந்த தகவலை பரப்பியது யார் என்று கூட கண்டுபிடித்துவிட்டோம்.

அந்த அவதூறான செய்தியை பரப்பியது மாணவர்கள் இல்லை. ஆகவே இந்த போராட்டத்துக்கும் மாணவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. போராட்டத்தில் பங்கேற்று உங்களது படிப்பை கெடுத்து கொள்ள வேண்டாம். உங்களின் எதிர்காலமே பாழாகிவிடும். அதனால் நாளை யாரும் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ள கூடாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.