திருவாரூர்,

திருவாரூர் அருகே கன்றுகுட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருவாரூர் அருகே ஜாம்புவானோடை  பகுதியை சேர்ந்தவரின் கன்றுகுட்டி தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டடுள்ளது.

இதைத்தொடர்ந்து அந்த கன்று குட்டிக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மாடுகள் அந்த பகுதியில் உள்ள  முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு, மாலையில் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியில் தெற்கு தெருவை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்,  மதியழகன் வீட்டில் இருந்த ஒரு கன்றுக்குட்டியை பார்த்து, இது என்னுடைய கன்றுக்குட்டி என்று உரிமை கொண்டாடி உள்ளார்.

இதன் காரணமாக இருவரும் இடையே தகராறு மூண்டது. இதுகுறித்து இருவரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதனை விசாரித்த போலீசார், மதியழகனிடம் உரிமை கொண்டாடும் கன்றுக்குட்டியையும், இருவரது தாய் பசுவையும் காவல்நிலையம் கொண்டு வருமாறு கூறினர்.

கன்றுக்குட்டி எந்த தாய் பசுவிடம் செல்கிறதோ அவருக்குத்தான் அந்த கன்றுக்குட்டி என்றும் இருவரிடமும் கூறி, கன்றுகுட்டியை அவிழ்த்து விட்டனர். அந்த குட்டியானது மதியழகனின் தாய் பசுவிடமே சென்றது.  இதனையடுத்து கன்றுக்குட்டி மதியழகனிடம் ஒப்படைக்கபட்டது.

ஆனால், அதை மறுக்க ராஜரத்தினம் தரப்பினர், போலீசாரின் தீர்ப்பையும் மீறி மதியழகன் வீட்டிற்கு சென்று கன்றுக்குட்டியை தூக்கி சென்றுள்ளனர்.  இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவரது பசுவையும், கன்றுகுட்டியையும் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர,  கால்நடை மருத்துவக்குழுவினர் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கன்றுகுட்டிக்கு டிஎன்ஏ சோதனை செய்வது குறித்து அந்த பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.