திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இறுதித்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து!

திருவாரூர்:

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வு உள்பட அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இதற்கு முன் நடந்த பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  ஜூன் 1ந்தேதி முதல்  கொரோனாவின் வெறியாட்டம் தீவிரமடைந்து உள்ளது. தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக  தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகள்  10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சில தனியார் கல்லூரிகளும் செமஸ்டர் தேர்வுகளை ரத்த செய்வதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதில், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்க்கு முன் நடந்த பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.