4 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா!

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெற்று வரும் திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத்திருவிழா, கமலாலய  தெப்பக் குளத்தில் போதிய நீர் இல்லாததால், கடந்த 4 ஆண்டுகளாக தெப்பத் திருவிழா கொண்டாடப் படாமல் இருந்து வந்தது.

இதுகுறித்து தியாகராஜர் பக்தர்கள்,  பொதுமக்கள்  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலை யில், இந்த ஆண்டு திருவாரூர் நகராட்சி,  இந்து அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஆகியவை இணைந்து, தெப்பத்திற்கு தேவையான நீரை தனியார்களின் பங்களிப்புடன் கோவில் குளத்தில் நிரப்பி  நடவடிக்கை எடுத்ததன்  காரணமாக இந்த ஆண்டு  தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

நேற்று திருவாரூர் கமலாய குளத்தில்  தெப்பத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று 2வது நாளாக வெகு விமரிசையாக நடைபெற்றது. நாளையும் நடை நடக்கவிருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா, கடந்த மே மாதம் 27ந்தேதி வெகு விமரிசை யாக நடைபெற்ற நிலையில், தற்போது தெப்பத்திருவிழாவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தெப்பத்திருவிழா கண்டு, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தெப்பத் திருவிழாவையொட்டி, அதற்கான தெப்பத்தேர் 425 காலி பேரல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது.  36 அடி உயரத்தில் 14 தூண்களுடன்  மூன்றடுக்கு மாளிகைபோல கண்ணை கவரும் விதத்தில் தெப்பத்தேர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தேரில் ஒரே சமயம் 400 பேர் பயணம் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டு, தெப்பத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

ஒருநாளைக்கு மூன்று சுற்றுகள் வீதம், மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒன்பது சுற்றுகள் கமலாலயக் குளத்தை தெப்பம் சுற்றிவரும்.

இரவு சுமார் 8 மணிக்கு தெப்பத்தேர் முதல் சுற்று தொடங்கும் நிலையில், 2வது சுற்று இரவு 11 மணிக்கும் 3வது சுற்று இரவு 2 மணி அளவிலும் தொடங்கி அதிகாலை 4 மணி வரை உற்சாக மாகவும் குதூகலமுடனும் தேர்த் திருவிழா நடைபெறுகிறத.

தெப்பத்தில் திருவாரூர்  தியாகராஜர், கமலாம்பாள்,  நீலோத்பலாம்பாள், விநாயகர், முருகன் ஆகியோரின் அழகிய வேலைப்பாடுடன் கூடிய  பொம்மைகளுடன்   அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தெப்பத்தேரில்  பார்வதி அம்பாள் சமேத கல்யாண சுந்தரேசுவரர், இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, காலையில் கோயிலுக்குள் செல்கிறார்.

தெப்பத்திருவிழாவையொட்டி திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தெப்பத் திருவிழாவையொட்டி அந்த பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.

தெப்பத்தேர் திருவிழாவையொட்டி ஏராளமான காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

You may have missed