திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்

திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அஷ்டபுஜக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம் :-

வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள்.

திருமாலின் அவதாரங்களில் ஒருவரான நருசிம்ஹர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாக்ஷிகா நருசிம்ஹ சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு.

ஸ்தல வரலாறு :-

மகாவிஷ்ணு, நருசிம்ஹ அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் எனும் குகையிலிருந்து புறப்பட்டு ஹிரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்த சேர்ந்தார்.

இதனால் பயந்த அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்று கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார்.

இவ்விடத்திலேயே யோக ந்ருசிம்ஹராகி அமர்ந்து விட்டார்.

புராண வரலாற்றின்படி பிருகு மகரிஷிக்குக் கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை.

தற்போது ந்ருசிம்ஹனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் இறைவன் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர், ந்ருசிம்ஹர், ஆளரி, முகுந்த நாயகன் என்னும் பெயர்கள் கொண்டு அருள் பாலிக்கிறார்.

வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கொண்டு தாயார் விளங்குகிறார்.

இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது.

சிறப்புகள் :-

பேயாழ்வார் 3 பாசுரங்களிலும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

நமக்கெல்லாம் மன நிம்மதியையும் தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதி தான்.

எப்பேர்ப்பட்ட ப்ரச்னைகள் வந்தாலும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சர்வ சாதாரணமாக நிற்பதற்கு அடிப்படைக் காரணம் பெருமாள் கோயில் என்பது உண்மை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல, எம்பெருமானுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது.

அப்படி எம்பெருமான் தானே விரும்பி அமர்ந்த இடம் தான் திருவேளுக்கை என்னும் புனித ஸ்தலம்.

இது காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது.

மூன்று நிலை கோபுரம், ஒரு ப்ரஹாரம் என்று சின்ன கோயிலாக இது காணப்பட்டாலும் மூர்த்தி பெரிது.

மூலவர் :-

ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாள். இன்னொரு பெயர் ஸ்ரீ முகுந்த பெருமாள்.

விமானம் :-

கனக விமானம்

தாயார் :-

வேளுக்கை வல்லி

தீர்த்தம் :-

கனக சரஸ் தீர்த்தம்.

அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார்.

பிருகு முனிவருக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. இயல்பான வடிவத்தோடு காட்சி தந்த திருமால், நருசிம்ஹ அவதாரம் எடுத்த போது எப்படி இருந்திருப்பார் என்று. இந்த காட்சியை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என்று இந்த ஸ்தலத்தில் தவம் கொண்டிருந்தார்.

பிருகு முனிவரின் வேண்டுகோளை அறிந்து பெருமாள் நருசிம்ஹ மூர்த்தியாகக் கனக விமானத்தின் கீழ் காட்சி அளித்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.

இன்னொரு வரலாறும் உண்டு :-

ஹிரண்யனைக் கொன்ற பின்னர் அவனைச் சார்ந்த அசுரர்கள் கூட்டம் நரசிங்க மூர்த்தியைத் தாக்க வந்தது.

அந்த அசுரக் கூட்டத்தை வீறு கொண்டு தாக்கி அவர்களைத் துரத்தினார் பெருமாள்.

அவர்கள் நரசிங்க மூர்த்தியின் வேகத்திற்கு அஞ்சி ஓடும் பொழுது அவர்களைத் தாக்கி வந்த பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிக்க இந்த ஸ்தலத்திற்கு வந்ததும் அப்படியே ஆனந்தமாக இங்கேயே அமர்ந்து விட்டார்.

ஒருவேளை, ஓடிப்போன அசுரர்கள் திரும்பி வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே மிகவும் உத்தமம் என்று பகவான் நினைத்து யோக நருசிம்ஹ மூர்த்தியாக அருள்பாலித்து நின்று தர்சனம் தருகிறார்.

பேயாழ்வார் திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பற்றிப் பாடியிருக்கின்றனர்.

பரிகாரம் :-

அன்றாடம் நாம் ஏதாவது ஒரு விஷயத்திற்குச் சம்பந்தமில்லாத நபர்களுக்காகப் பயந்து சாகிறோம்.

எந்த காரியமும் சரிவரச் செய்ய முடியாமல் ஏதோ ஒரு பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவர்கள்.

கெட்ட கனவுகளால் அவதிப்படுபவர்கள்.

தாதாக்களினால், குண்டர்களினால், தொந்தரவு, கஷ்டப்படுகிறவர்கள்.

படிக்கமுடியாமல் திண்டாடக் கூடிய மாணவ மாணவிகள்.

தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டு அதனால் தன் எதிர்கால வாழ்க்கை வீணாகிப் போய்விடுமோ என்று நினைப்பவர்கள்.

இவர்களெல்லாம் இங்குள்ள நருசிம்ஹரை தர்சனம் செய்து தங்கள் உள்ளக் கிடக்கையை பிரார்த்தனையாகச் செய்தால் நல்லபடியாக மாற்றி நடத்தி வைப்பார், மன பயமும் உடனே விலகும்.