திருவேற்காடு காவல் நிலையத்தில் பெண் தீக்குளித்து மரணம் : அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை

சென்னை திருவேற்காடு காவல்நிலையத்தில் அதிகாரிகள் மிரட்டியதால் தீக்குளித்த பெண் மரணம் அடைந்ததை ஒட்டி ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள செந்தமிழ் நகரில் கஜேந்திரன் (வயது 40) மற்றும் அவர் மனைவி ரேணுகா (வயது 34) ஆகியோர் தங்கள் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.   செவிலியராக பணி புரியும் ரேணுகா தனது வீட்டின் அருகே ஒரு கழிப்பறையை கட்டி வந்தார்.    இந்த கட்டுமானப் பணி அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.

அதனால் அடுத்த வீட்டில் வசிக்கும் அமிர்தவல்லி இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.   இருவருக்கும் இடையில் வாய்த் தகராறு முற்றவே நேற்று முன் தினம் அமிர்தவல்லி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   அமிர்தவல்லிக்கு அரசியல் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதனால் ரேணுகாவை காவல்நிலையத்தில் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் மிரட்டி உள்ளனர்.    ரேணுகா தன் பக்கம் நியாயம் உள்ளதாக பதில் அளித்துள்ளார்.   அதனால் கோபம் அடைந்த இருவரும் ரேணுகா தவறான தொழில் செய்வதாக வழக்கு பதிவோம் என மிரட்டி உள்ளனர்.  இதனால் மனம் உடைந்த ரேணுகா வெளியில் சென்று பெட்ரோல் வாங்கி வந்து காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்துள்ளார்.

அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அவர் தனது கணவரிடம் நடந்ததை கூறி உள்ளார்.   அந்த உரையாடல் மொபைலில் பதிவு செய்யபட்டுள்ளது.  இன்று சிகிச்சை பலனின்றி ரேணுகா மரணம் அடைந்தார்.  அவர் கணவர் தனது மனைவி பேசிய பதிவை காவல் ஆணையரிடம் ஒப்படைத்து புகார் அளித்துள்ளார்.

காவல் ஆணையர் உத்தரவுக்கிணங்க இன்று உயர் அதிகாரிகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.    விசாரணை  முடிவில் கால்வநிலைய ஆணையர் மற்றும் துணை ஆய்வாளர் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

You may have missed