தூத்துக்குடி,

பாராளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19ம் ஆண்டுக்கான பொதுநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், நிதிநிலை அறிக்கை குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

தூத்துக்குடியில் நடைபெறும் ஐம்பெரும் விழாவுக்கு வருகை தந்த குஷ்பு,  அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது,

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்த துரோகம் என்றார். இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்றும் கூறினார்.

இந்த பட்ஜெட்டில்,  மக்களுக்கான எந்த ஒரு புதிய திட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை. தற்போது அவர்கள் கொண்டு வரும் அனைத்து திட்டமும் காங்கிரஸ் ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். அதனை பெயர் மாற்றி தங்கள் திட்டம் போல் காட்டிக்கொள்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்றும் பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்றும் கூறினார்.

இனி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இதுவே கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது.

இது ஊழல் இல்லாத அரசு என்று கூறுகின்றனர். பாஜக ஆட்சியில் செய்த ஊழலை மூடி மறைக்கின்றனர். ஊழல் இல்லாத அரசு என்றால் ராஜஸ்தானில் ஜெயித்திருக்க வேண்டுமே என்று கேள்வி எழுப்பினார். அமித்ஷா மகனின் வளர்ச்சி ஊழல் இல்லையா என்றும் மத்திய அரசை விமர்சித்தார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சொன்னது போல மத்திய அரசின் இந்த பட்ஜெட்டால் எந்த வகையிலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார். அருண்ஜெட்லி மன்மோகன்சிங், சிதம்பரம் போன்று பொருளாதார நிபுணர் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக இருந்தவர்,  அவரால் வேறு எப்படி பட்ஜெட் வழங்க முடியும் என்றும் கூறினார்.

நா ட்டில் பாலியல் கொடுமைக்கு எதிராக வழங்கப்படும் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என்றும் குஷ்பு கூறினார்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் பேருந்துகள் எதுவுமே சரியில்லை. ஓட்டை உடைசல் பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். பின்னர்  பேருந்து கட்டணத்தை பைசாவில் குறைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.