நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது: மத்தியஅரசுக்கு லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம்

டில்லி:

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்று ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாக சமூக ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர்  உபா சட்டத்தில்.கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் நடைபெற்ற பீமா கோரேகான் கலவர சம்பவம் தொடர்பாக புனே போலீஸார் 9 சமூக செயல்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அதில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து, பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதுதொடர்பாக மகாராஷ்டிராவில் கைப்பற்றப்பட்ட கடிதத்தை ஆதாரமாக கொண்டு தற்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசின் அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான லாலுபிரசாத் யாதவ் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. ஐந்து அறிவு ஜீவிகளின் கைது செய்யப்பட்டிருப்பது நாடு அவசர நிலையை நோக்கி நகர்வதாக தெரிகிறது. மத்தியஅரசின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் செய்கிறேன் என்று கூறி உள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து ராகுல்காந்தி டிவிட்டர் மூலம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது, “ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் என்ஜிஓ-வுக்கு மட்டுமே இந்தியாவில் இடமுள்ளது. வேறு எல்லா என்ஜிஓ-க்களையும் மூடிவிடுங்கள். அனைத்து செயற்பாட்டாளர்களையும் சிறையிலடையுங்கள்…  புகார் செய்வோரை சுட்டுவிடுங்கள்.. என குறிப்பிட் டிருந்தார்.