’இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு’

வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும் – இரா.மன்னர் மன்னன்

அத்தியாயம் – 2  

‘இந்த உலகத்தையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்பு’

– என்று சொல்லும் போது நெருப்பு, சக்கரம் என்று துவங்கி மின்சாரம், கணினி, செல்ஃபோன் வரை ஒரு பட்டியல் உங்கள் மனதில் ஓடும். ஆனால் இந்தத் தலைப்பில் நாம் பார்க்கப் போகும் கண்டுபிடிப்பு ஒரு பொருள் அல்ல, ஒரு எண்ணம். இந்த எண்ணம்தான் இன்றைய உலகம் முழுமையிலும் இன்று பரந்து விரிந்து வேர்பிடித்து உள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு பற்றி அறிவியல் நூல்களோ வரலாற்று நூல்களோ அதிகம் பேசுவது இல்லை. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு நிகழவில்லை என்றால் இன்றைய வரலாற்றின் வடிவம் இன்று உள்ள வடிவமாக கட்டாயம் இருந்திருக்காது. இத்தனைக்கும் அந்தக் கண்டுபிடிப்பு முழுதும் உண்மையானது அல்ல. 50% மட்டுமே உண்மையானது. அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிப் பார்க்கும் முன்பாக அது கண்டுபிடிக்கப்படும் வரையில் உலகம் எப்படி இருந்தது அதன் பின் எப்படி மாறியது என்று முதலில் பார்ப்போம்.

இன்று உலகில் உள்ள பெரும்பாலான சமூகங்கள் தந்தைவழிச் சமூகங்களாக உள்ளன. உறவு முறைகள், சொத்துரிமைகள், அதிகாரப் பகிர்வுகள் ஆகிய அனைத்துமே இன்று ஆண் வழியில்தான் கடத்தப்படுகின்றன. வெகுசில பழமைவாய்ந்த சமூகங்கள் இதில் விதிவிலக்கு.

ஆதிமனிதன் குகைகளில் வாழ்ந்த காலகட்டத்தில் உலகின் எந்த ஒரு பகுதியிலும் தந்தை வழிச் சமூகம் என்ற அமைப்பே இல்லை. பெரும்பாலான சமூகங்களில் தந்தை என்ற இடம் யாருக்குமே வழங்கப்படவில்லை. அப்போதைய உலகை இயக்கியது தாய்வழிச் சமூக அமைப்புதான். அப்போதிருந்த மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தாய் தலைமையேற்று வழிநடத்தினாள். அவளது மறைவிற்குப் பிறகோ வீழ்ச்சிக்குப் பிறகோ அவளது வலிமை வாய்ந்த மகள் அவளது இடத்தை எடுத்துக் கொண்டாள்.

மனித இனத்தின் வரலாற்றைப் படித்தவர்கள், அல்லது ராகுல்ஜியின் ‘வால்கா முதல் கங்கைவரை’ நூலைப் போன்ற மனிதகுல வரலாறு சார்ந்து எழுதப்பட்ட நூல்களைப் படித்தவர்களுக்கு இந்தத் தகவல் புதிதாக இருக்காது. பிறருக்கு நம்பவே சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆதிகால மக்களின் குழுத்தலைவர், போர்த்தளபதி, சமயத் தலைவர், பூசாரி – எல்லாமே பெண்கள்தான். அன்றைய உலகம் பெண்களுடையதாக இருந்தது.

இந்தத் தாய்வழிச் சமூகம் உலகம் எங்கும் வீழ்த்தப்பட்டே தந்தை வழிச் சமூகம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு.3500களில்) துவங்கிய தாய்வழிச் சமூகத்தின் வீழ்ச்சி அடுத்த 2000 ஆண்டுகளில் பெரும்பான்மையான இடங்களில் தந்தைவழிச் சமூகத்தை உருவாக்கியது. ஆனால் இன்று வரையில் முழு உலகமும் தந்தைவழிச் சமூக அமைப்பைப் பின்பற்றவில்லை. 1861ல் ஜோஹன் ஜாகோப் எழுதிய “மதர்ஸ் ரைட்’ (Mother’s Right) என்ற நூல் தாய்வழிச் சமூகம் குறித்த ஆய்வுகளுக்கு திசை காட்டியது.  1877ஆம் ஆண்டில் உலகெங்கும் உள்ள ஆதிவாசி இனங்கள் பலவற்றை ஆராய்ந்த பின்னர் லூயிஸ் மார்கன் ‘பண்டைய சமுதாயங்கள் (Ancient society)’ என்ற நூலை எழுதினார். இந்த நூல்தான்  முன்னர் நிகழ்ந்த  மாபெரும் மாற்றத்தை மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தியது.

பின்னர் தாய்வழிச் சமூகம் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு, உலகெங்கிலும் இருந்த தாய்வழிச் சமூகத்தின் பண்டைய சான்றுகள் திரட்டப்பட்டன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பெண்களுக்குக் கட்டுப்படுபவர்களாகவும், பெண்களால் புதிய உயிர்களை உருவாக்க முடிவது குறித்துப் பொறாமைப்படுபவர்களாகவுமே ஆண்கள் இருந்தார்கள் – என்பதையே உலகெங்கிலும்  இவ்வாறாகக் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள் காட்டின.

15,000 ஆண்டுகள் முன்பு உலகின் பெரும் தெய்வங்கள் அனைத்தும் பெண்கள்தான். அன்றைய உலகின் மிகப் பழைய கோவில்கள் அனைத்தும் பெண் தெய்வங்களின் கோவில்களாகவே இருந்தன.  சுமார் கி.மு.ஏழாயிரத்தில் ஜெரிக்கோவில் பெண் தெய்வத்திற்கு கோவில் கட்டப்பட்டது. சுமார் கி.மு.ஆறாயிரத்தில் துருக்கியில் நாற்பதுக்கும் குறையாத பெண் தெய்வ ஆலயங்கள் இருந்தன. சுமார் கி.மு.நான்காயிரத்தில் சுமேரியாவில் சொர்க்கத்தின் அரசிக்குக் கோவில் கட்டப்பட்டது. சுமார் கி.மு.மூன்றாயிரத்தில் உலகின் மிகப்பல இடங்களில் பெண் தெய்வ கோவில்கள் இருந்தன. இவற்றோடு ஒப்பிடத்தக்க பழமையுடைய ஆண்தெய்வக் கோவில்கள் எதுவும் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. (வெகுசில இடங்களில் லிங்க வழிபாட்டின் எச்சங்கள் மட்டும் கிடைத்து உள்ளன. இவை ஆண்களின் குறியீடான லிங்க வழிபாடு முற்காலங்களின் சிறிய வழிபாடாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது என்பதையே காட்டுகின்றன.)

உலகின் பண்டைய நாகரிகங்கள் வளர்ந்த எகிப்து, கிரேக்கம், ரோமானியம், மெசபட்டோமியா மற்றும் நமது இந்தியா எங்கும் ஆதியில் ஆண் தெய்வங்கள் கிடையாது. எகிப்திய மக்கள் மட், ஐஸிஸ் ஆகிய பெண் கடவுளர்களையும், கிரேக்கர்கள் சிபெல், ஜியா, ஆர்டிமெஸ், ஆஃப்ரதைதி, தெமிடர் ஆகிய பெண் தெய்வங்களையும் வழிபட்டனர். கிரேக்கர்களின் பெண் தெய்வங்களை அப்படியே ஏற்றுக் கொண்ட ரோமானியர்கள் அந்தப் பெண் தெய்வங்களுக்கு உரிய பெயர்களை மட்டும் ரோமன் மொழியில் மாற்றினர். மெசபட்டோமிய மக்கள் டையானா, வீனஸ், ஜீனோ, இஷ்தார் – ஆகிய பெண் தெய்வங்களை வழிபட்டனர்.

இந்து சமயம் போற்றும் நால்வேதங்களில் மூத்த வேதமான ரிக் வேதத்தில் சிவனைப் பற்றிய பேச்சே இல்லை (வேதங்களில் உள்ள ருத்ரன் என்ற கடவுள் பிறகு சிவனோடு ஒப்புமைப்படுத்தப்படுவது தனி, இருவரும் ஒருவர் இல்லை).  ஆனால் சக்தி தேவியின் ஆற்றல் அதில் குறிக்கப்பட்டு உள்ளது. தமிழின் மிக மூத்த நூலான தொல்காப்பியத்தில் முருகன் பற்றிய குறிப்பு இல்லை. சிங்கத்தின் மேல் உலவும் கொற்றவை அங்கு தமிழ் மக்களின் தெய்வமாகக் குறிக்கப்படுகிறாள்.

இந்த நிலையில் ஆண்தெய்வங்கள் பெண் தெய்வங்களின் உறவினர்களாகவே பின்னர் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். உதாரணமாக சிவன் சக்தியின் கணவனாக அறிமுகம் ஆனார், முருகன் கொற்றவையின் மகனாக அறிமுகமானார். இவர்களால் பெண் தெய்வங்கள் பிறகு பின் வரிசைகளுக்கு நகர்த்தப்பட்டனர். இதற்காகப் பல கதைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் உருவாக்கப்பட்டன.

கிரேக்கப் புராணத்தில் அஃப்ரதைதி தன் மகன் ப்ரையாபஸ் உடன் தன் காவல் பணிகளை முதலில் பகிர்ந்து கொண்டாள். பின்னர் காவல் பணி ப்ரையாபஸ்ஸின் பணியானது. (ப்ரையாபஸ் நீண்ட ஆண்குறி உடைய ஆண் கடவுளாகக் கூறப்பட்டார்) எகிப்தியப் புராணத்திலே பெண் கடவுளான ஐஸிஸ் தன் மகன் ஹோரஸ்ஸிற்கு தனது எல்லா சக்திகளையும் தாரை வார்த்தாள். தமிழகத்திலே கொற்றவை தனது அனைத்து சக்திகளையும் ஒன்றாக்கி வேலாக வடித்து மகன் முருகனுக்குக் கொடுத்தாள்.

மேலும் ஆண் தெய்வங்கள் பெண்களின் உதவியின்றி ஆண் தெய்வங்களைப் பெற்றதான புராணக் கதைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் உலகெங்கும் தோன்றின. கிரேக்கத்தின் முழுமுதல் ஆண் கடவுளான ஜீயஸ் தன் தொடையில் இருந்து டயோனிஸஸ் என்ற புதிய ஆண் கடவுளைப் பிரசவித்தார். சிவன் நெற்றிக் கண்ணில் இருந்து கந்தனுக்கு உயிர் கொடுத்தார் – என்பவை பிரபலமான புராணக் கதைகள்.

நெடுங்காலம் கழித்துத் தோன்றிய கிறிஸ்துவ சமயம் ’பெண்ணில் இருந்தே மனித குலம் தோன்றியது’ – என்பதை மறைக்க, ‘ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாள் தோன்றினாள்’ என்று கூறி, படைப்பு முறையையே மாற்றி மக்களிடம் சொல்லியது. பெண் சிந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதைக் காட்ட மட்டும் ஏவாளின் பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. கி.பி.500 ஆம் ஆண்டில் கிறிஸ்தவத்தை ஏற்ற அரசர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட கடைசிப் பெண்கடவுளின் கோவிலையும் பலவந்தமாக மூடினார்கள். பிற்காலத்தில் விவிலியத்தை தொகுத்தவர்கள் ‘மகதலேமா மரியாள்’ போன்ற தொழத்தக்க பெண்களை சமயத்தில் இருந்து வெளியே தூக்கிப் போட்டனர்.

ஆனால் இப்படியெல்லாம் பலர் முயன்றும், பெண் தெய்வ வழிபாட்டை உலகிலிருந்து முழுவதுமாக அழித்துவிட முடியவில்லை, உலகெங்கும் கல்வி, செல்வம், வீரம் – ஆகியவற்றுக்கு அதிபதிகளாக பெண் தெய்வங்களே வழிபடப்படுகிறார்கள். இந்தியாவில் அவர்கள் சரஸ்வதி, இலக்குமி, பார்வதி. கிரேக்கத்தில் அவர்கள் அதீனா, அஃப்ரதைதி, ஹீரா. ரோமில் அவர்கள் மினர்வா, வீனஸ், ஜீனோ. பெயர்தான் வேறு தொழில் ஒன்றுதான்.

பெண் கடவுள்கள் மதத்தில் தப்பிப் பிழைத்ததுபோல தாய்வழிச் சமூகம் உலகின் சில சமூகங்களில் தப்பிப் பிழைத்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மதங்கள் அனைத்தும் பெண் கடவுளர்களில் இருந்து ஆண் கடவுளர்களை நோக்கி நகர்ந்ததும், அதே கால கட்டத்தில் உலகம் முழுவதும் தாய் வழிச் சமுதாய முறை அழிவைச் சந்தித்து தந்தைவழிச் சமுதாய முறை ஓங்கியதும் தற்செயலானது அல்ல. இந்த மாபெரும் மாற்றத்தை நிகழ்த்திய ஒரு கண்டுபிடிப்பு உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றா இல்லையா?. அந்தக் கண்டுபிடிப்பு உலகை மாற்றியுள்ளதா இல்லையா?

அந்தக் கண்டுபிடிப்புதான் ‘குழந்தைப் பேறில் ஆணுக்குப் பங்கு உண்டு’ என்பது!.

3500 ஆண்டுகளுக்கு முன்புவரை மனித குலத்தில் யாருக்கும் பெண் கருவுறுவதற்கும் ஆணின் உடலுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாது -என்பது ஏற்றுக் கொள்வதற்கே கடினமான கருத்துதான். ஆனால் அது உண்மை. 5500 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆண் தனது பங்களிப்பினால் கருவுறுதல் நடக்கிறது என்று கண்டுபிடித்தான், அந்தக் கருத்து உலகம் முழுக்க பரவ அடுத்த 2000 ஆண்டுகளுக்கு எடுத்து கொண்டது. பண்டைய மத வழிபாடுகளும் சடங்குகளும் இந்த உண்மைக்குச் சான்றாக நிற்கின்றன.

இந்து சமயத்தின்  முதல் வேதமான ரிக் வேதத்தில் காணப்படும் மொழியின் தெய்வமான வாக் என்பவள் தான் கறுவுற்றதைப் பற்றிக் கூறும்போது ‘நான் சர்வ சக்தியுடன் கருவுற்றேன்’ என்று சுய பெருமிதத்தோடு கூறுகிறாள். கருவுறுதலில் ஆணின் பங்களிப்பு வாக் வழிபடப்பட்ட காலத்தில் (வேதங்கள் வகுக்கப்பட்ட ஆரம்ப காலத்தில்) உணரப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

எகிப்தின் ‘நட்’ என்ற இடத்திலே உள்ள மிகப் பழமையான ‘புனிதஸ்தலம்’ என்ற கோவிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில்

‘எந்த ஆணும் என்னுடைய நிர்வாணத் தன்மையை வெளிப்படுத்தியதில்லை. நான் பிறப்பித்ததன் பலன் சூரியனாகும்’ – என்ற வரிகள் காணப்படுகின்றன. இந்த வரிகள் மூலம் அவள் எந்த ஆணும் தனது உடலைப் பார்த்தது இல்லை என்பதையும், தான் கருவுற்றதையும் கூறுகிறாள். கருத்தரிப்பில் ஆணின் பங்கு உணரப்படாத அன்றைய நிலையையே இது காட்டுகின்றது. இதை அன்றைய ஆண்களும் நம்பி இருந்தனர்.

பழங்கால ஆண்கள் இனப்பெருக்கம் முழுக்க முழுக்க பெண்களின் வன்மையால் நடைபெற்றதாகக் கருதினர். இதனால் பெண்ணின் இனப்பெருக்கத்திற்கு உரிய மாதவிலக்கை வளத்தின் குறியீடாக மக்கள் அனைவருமே கொண்டாடினர். அதன் நீட்சி இன்றும் இந்து சமயத்தில் உள்ள குங்குமம். பண்டைய கிரேக்கர்கள் ஆண்டுதோறும் தங்கள் விதைப்பைத் துவங்கும்போது பெண்ணின் மாதவிலக்கை விதைகளில் கலந்து விதைப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். இது போன்ற உதாரணங்கள் உலகெங்கும் உண்டு.

தங்களால் இனப்பெருக்கத்தில் பங்காற்ற முடியவில்லையே என்ற ஆற்றாமை ஆண்களுக்கு இருந்தது. ’அராண்டா’வைப் போன்ற பழங்கால சடங்குகள் ஆண்களின் ஆற்றாமைக்கு அப்போது வடிகால்களாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடி மக்கள் இந்தச் சடங்கை மேற்கொள்கின்றனர். இவர்கள் ‘அராண்டா பழங்குடிகள்’ என்றே அழைக்கப்படுகின்றனர். அராண்டா என்பதற்கு பிளவுண்ட ஆண்குறி என்பது நேரடி அர்த்தம். இந்தச் சடங்கில் ஒரு ஆண்மகனுடைய குறியானது இரண்டாகப் பிளக்கப்பட்டு அதன் மூலம் அவனது மாதவிலக்கு போக்கப்படுகிறது. சடங்குகளில் இந்தக் காயம் மீண்டும் மீண்டும் திறக்கப்படும். இந்தச் சடங்கில் பங்கேற்றவனுக்கு ‘பெண் குறியை உடையவன்’ என்ற கவுரவப் பட்டமும் வழங்கப்படும்.

இந்த நிலையில்தான் கி.மு.3500 வாக்கில் ஆணின் விந்தணு மூலமாகக் குழந்தை பிறக்கின்றது என்ற கருத்து தோன்றுகின்றது. இந்தக் கருத்து ‘பெண் விளைநிலம், ஆணே விதை’ என்ற எண்ணமாக வலுவடைகின்றது. இதுவரை ஒடுங்கிக் கிடந்த ஆண் வர்க்கம் இதனால் சிலிர்த்து எழுகின்றது. பெண்களை ஒரேயடியாக ஒடுக்கத் துவங்கியது. இதனை வரலாற்றாசிரியர் ஜூன் மார்க்கடேல்

‘ஆண்மகன் பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்டிருந்த நிலையில் சமத்துவம் போதுமானதல்ல, இப்பொழுது அவன் தனது சக்தியின் முழு அர்த்தத்தைப் புரிந்துகொண்டான். இனி ஆதிக்கம் செலுத்தப்போகிறான்’ என்று எழுதுகிறார்.

இதன் பின்னர் உலக படைப்பின் ஆற்றல் சின்னமாக ஆண்குறி அல்லது லிங்கம் பார்க்கப்பட்டது. லிங்கம் ஆண்மையின் சின்னம் என்ற கருத்து ஏற்கனவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நிலையில் இந்தக் கண்டுபிடிப்பால் அந்தக் கருத்தாக்கம் புத்துயிர் பெற்றது. கி.மு.3500 முதல் உலகம் முழுவதும் லிங்க வழிபாடு பரந்துபட்ட ஒன்றாக வளரத் துவங்கியது. கிரீஸில், இத்தாலியில், பாம்பெய் போன்ற அழிந்த புராண நகரங்களில், பண்டைய இங்கிலாந்தில் லிங்க வழிபாட்டின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் இன்றும் லிங்க வழிபாடு உள்ளது நாம் அறிந்ததே.

தனக்குப் படைப்பில் பங்கு உள்ளது என்பதை அறிந்த ஆண் அப்போதே ’தான் மட்டுமே படைப்பிற்குக் காரணம்’ – என்று எண்ணத் துவங்கினான். ஆணின் விந்தணுவுக்குள் ஒரு குட்டி மனிதன் இருக்கின்றான். அவன் பெண்ணின் வயிற்றுக்குள் சென்று வளர்கின்றான். இதில் பெண்ணின் பங்கு ஒன்றுமே இல்லை – என்று பெண் ஒதுக்கப்பட்டாள். பெண்கள் கல்வி கற்காமல், போர் பயிற்சி பெறாமல், கலைகளை அறியாமல் இருந்தாலும் தங்கள் வாரிசுகள் தங்களைப் போல இருப்பார்கள் என்று பிற்காலம் முழுதும் ஆண்கள் எண்ண இந்த கருத்துருவாக்கமே காரணமாக இருந்தது. இந்த எண்ணம்தான் தந்தைவழிச் சமுதாயத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவியது. தாய்வழிச் சமூக அமைப்பை ஒன்றும் இல்லாமல் செய்தது. இந்தப் புதிய எண்ணத்தின் பாதிப்பானது உலகின் அத்தனை மூலைகளிலும் எதிரொலித்த ஒன்று. இதில் மேலை நாடுகள் கீழைநாடுகள் என்ற வித்தியாசம் இல்லை. இது வரலாறு அறிய வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை. ‘வரலாற்றையே மாற்றிய பாதி உண்மையான கண்டுபிடிப்பு’ இது. ஆனால் இதனை எந்த நூல்களும் பதிவு செய்யவில்லை. மானுடவியலைப் படிப்பவர்களைத் தவிர பிறருக்கு இதன் அடிப்படைகள் கூட கற்பிக்கப்படுவதில்லை. இதுபற்றி ரோசலிண்ட் மைல்ஸ்

’கருவுறுவதற்கு தான் அத்தியாவசியமானவன் என்பதை மனிதன் அறுதியிட்டுக் கூறத் தொடங்கியபோது பழைய மனப்போக்குகள் திடீரென சரிந்தன. இது மனிதனுடைய வரலாற்றில் மிக முக்கியமான புரட்சியாகும். இது இயந்திரம், விவசாயம் மற்றும் உலோகங்களுடைய உபயோகம் ஆகியவற்றுடன் சமமாகக் கருதப்படாதது வியப்புக்குரியதாகும்’

– என்று தனது ’உலக வரலாற்றில் பெண்கள்’ நூலில் கூறி உள்ளார்.

ஆண்கள் இப்படியாக ஒரு பக்கம் பெண்களை நசுக்கிக் கொண்டு இருக்க, மனித குலத்திற்காக பெண்கள் செய்த ஒரு மாபெரும் தியாகம் அவர்களை காலப்போக்கில் ஆண்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களாக மாற்றியது. பொதுவாக உலகின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தலையின் இயல்பான அளவு ஒன்று உண்டு. தலையின் அளவு அதன் உள்ளே உள்ள மூளையின் அளவோடு பெருத்த தலை அளவும் ஒரு பிரதான காரணம். ஆதி கால மனிதன் சிறிய தலை கொண்டவனாக இருந்தான், பின்னர் வந்த மனிதர்களின் தலைகள் பெருத்துக் கொண்டே வந்தன, உடனாக அறிவும்தான். இந்த மாபெரும் மாற்றத்திற்கு பெண்களின் உடல் ஒத்துழைத்த விதம் அபாரமானது.

பரிமாணத்தில் பெண்ணின் தொடை எலும்புகள் குழந்தை எளிதாக வெளியேற்றப்பட ஏதுவாக உள்பக்கமாகத் திருப்பிக் கொண்டன, பெண்ணின் கருப்பை குழந்தையின் தலையில் முழுவதும் எலும்புகள் வளரும் முன்னரே அதற்குப் பிற வளர்ச்சிகளைத் தந்து வெளியேறத் தயார்படுத்தியது (தலை வளராத காரணத்தால்தான் மனிதக் குழந்தைகள் பிற மிருகங்களைப் போல பிறந்த உடன் எழுந்து நிற்பது, நடப்பது இல்லை. மீத வளர்ச்சி வெளியே நடக்கிறது. கருப்பையின் உள்ளே காத்த தாயே வெளியேயும் காக்கிறாள்).

இந்த பரிணாம வளர்ச்சியால்தான் மனித இனம் இன்று மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இதன் பலனாக பெண்கள் குழந்தைப் பேறின் போதும், பின்னும் அதிக வலிக்கு ஆளாகின்றனர், அவர்களது உடல் அமைப்பு குழந்தைப் பேறுக்குப் பிறகு மாற்றம் காண்கின்றது. மேலும் உள்பக்கமாக திரும்பிய தொடை அமைப்பு பெண்ணை வேகம்  குறைந்தவளாக்கியது. ஓட்டப்பந்தயங்களில் ஆண்கள் எப்போதும் பெண்களை விடவும் அதிக திறனோடு இருப்பதன் காரணம் இதுதான்.

எந்தப் பெண்ணின் தியாகத்தால் மனித மூளை வளர்ச்சி பெற்றதோ, அந்த மூளை அதே பெண்களை வலிமை குறைந்தவர்களாகப் பார்ப்பது பரிணாமத்தின் சாபக்கேடு.

கி.பி.18ஆம் நூற்றாண்டுவரையில் உலகெங்கும் பெண்கள் அடிமைப்பட்டுக் கிடந்த நிலையில் கி.பி.19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆலன் என்ற அறிவியலாளர் ‘கருவுறுதலில் ஆண்களைப் போல பெண்களுக்கும் பங்கு உள்ளது. ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் சேரும்போதுதான் கரு தோன்றுகின்றது’ என்பதை சான்றுகளுடன் நிறுவினார். இதன் பின்னரே ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்ற முழக்கம் உலகெங்கும் எழத் துவங்கியது. மீதம் இருந்த 50% உண்மை வெளிப்பட்டது.

ஆனாலும் கூட பெண்களின் உரிமைகள் சலுகைகளாகவே பார்க்கப்படும் நமது உலகில், அவர்கள் முன்பொருநாள் அனைத்தையுமே ஆண்டவர்கள் என்ற செய்தியும், ஒரு புதிய கண்டுபிடிப்பு அந்த நிலையை அடியோடு மாற்றிய செய்தியும் மறைக்கப்படுவது அவர்களுக்கு நாம் செய்யும் மற்றொரு அநியாயமே. வரலாறு என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்லான History என்பதன் வேர்களை ஆராய்ந்தால் அதில் உள்ள His என்பது ஆண்களைக் குறிப்பதாக உள்ளது. பொதுவான ஆங்கிலச் சொற்களான Mankind, Chairman, Fellow – என்பவை முழுக்க ஆண்பாலாக உள்ளன. பெண்ணைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான WOMAN என்பதில் MAN என்ற ஆண்பால் சொல் உள்லது, பெண் தெய்வத்தைக் குறிக்கும் GODDESS என்ற சொல்லில் ஆண் தெய்வத்தைக் குறிக்கும் GOD என்ற சொல் உள்ளது. இப்படியாக அறிவை வளர்க்க வேண்டிய மொழியும் வரலாறும் முழுக்க ஆணாதிக்கத் தொகுப்பாகவே உள்ளன.

இப்போது வரலாறு ஆணாதிக்கமாக உள்ளது, முன்பு வரலாறு பெண்ணாதிக்கமாக இருந்தது. எப்போது வரலாறு மானிட இனம் முழுவதற்குமான அன்பாதிக்கமாக இருக்குமோ என்று யாருக்கும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.