தமிழக இளைஞர்களின் ‘குழந்தைகளுக்கு அதிகாரம்’ குறும்படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பு

திருவனந்தபுரம்:

3 தமிழக இளைஞர்களின்   சொந்த வாழ்க்கை குறும்படமாக எடுக்கப்பட்டு, கேரளாவில் நடந்த சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் நாகடசம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஞானசேகர், சக்திவேல்,கோகுல்ரான். இவர்கள் மூவருக்கும் 18 வயதாகிறது.

தங்களுக்கு நடந்த அனுபவம் மற்றும் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணத்துக்கு எதிரான கருத்தை அடிப்படையாக வைத்து இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஞானசேகர் கூறும்போது, குழந்தைகள் பார்லிமென்ட்டை அமைத்த நாங்கள் இதுவரை 237 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளோம். இதில் என் சகோதரிக்கு நடக்க இருந்த திருமணமும் அடங்கும். நான் தற்போது பிஏ. முதலாண்டு படிக்கிறேன் என்றார்.

கோகுல்ராஜ் கூறும்போது, என் தந்தை இறந்துவிட்டார். உடல் நலிவுற்ற என் தாயாரால் படிக்க வைக்க முடியாததால், என்ஜினியரிங் படிப்பை முதலாண்டே தொடர முடியவில்லை என்றார்.

என் வாழ்க்கையை அப்படியே இந்த குறும்படம்   பிரதிபலிக்கிறது. என் தந்தை குடிகாரர். 30 இளைஞர்கள் சேர்ந்து சாராயம் விற்பனைக்கு எதிராக பிரச்சாரம் செய்தோம்.

எங்கள் பகுதியில் மதுபானக் கடையை அரசு மூடியும், சட்டவிரோதமாக விற்றனர். எங்களது போராட்டம் காரணமாக மதுபான விற்பனை முடிவுக்கு வந்தது. கவுன்சலிங்குக்குப் பிறகு என் தந்தையும் குடிப்பதை கொஞ்சம் குறைத்திருக்கிறார் என்றார் சக்திவேல்.

இவர்கள் நடத்தும் குழந்தை பார்லிமென்ட் மூலம் சொந்த கிராமத்தில் நூலகம் அமைத்து நன்கொடை மூலம் 6,500 புத்தகங்களை வாங்கியுள்ளனர்.

இவர்களது ‘குழந்தைகளுக்கு அதிகாரம்’ என்ற குறும்படம்    திங்களன்று சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

தமிழகத்தில் குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையை குழந்தைகள் எப்படி தடுத்தார்கள் என்பதை இந்த குறும்படம் விவரிக்கிறது.